தமிழ்நாடு முழுவதும் பரவலாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மிக கனமழை பெய்துள்ளது. பந்தலூர் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 27.8 சென்டிமீட்டர் அளவிற்கு அதிகனமழை பதிவாகியுள்ளது. இதேபோல் கூடலூரில் 19 சென்டிமீட்டர் என்ற அளவில் மிககனமழை பதிவாகியுள்ளது.
கூடலூரில் உள்ள மூன்று பகுதிகளில் 10 சென்டி மீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பந்தலூர் நகரமே மழை நீரில் மூழ்கியுள்ளது. அங்குள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பியதை அடுத்து சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது, இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். பந்தலூரில் கிராமம் ஒன்றை மழை நீர் முழுவதுமாக சூழ்ந்ததால், அங்கிருந்த 11 பேர் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள அரசுப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கூடலூர் அடுத்த பாடந்துறை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் மைதானத்தில் மழை நீர் குளம் போல் தேங்கி உள்ளது. ஆனால் அதனையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் இங்கு கால்பந்து விளையாடி வருகின்றனர். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சேதங்கள் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். நீர்நிலைகளுக்கு செல்லும் பாதைகளை தூர் வாராமல் விட்டதே இத்தகைய பாதிப்புகளுக்கு காரணம் எனவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
0 Comments