கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிப் பெற்று ஆட்சியை பிடித்தது. அந்த தேர்தலில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட புகழேந்தி, வெற்றிப் பெற்று எம்எல்ஏ ஆனார். திமுகவில் அடிப்படை உறுப்பினராக இருந்து படிப்படியாக வளர்ந்து எம்எல்ஏ பதவியை எட்டிப்பிடித்த புகழேந்தி, அமைச்சர் பொன்முடிக்கு மிகவும் நெருக்கமானவர். இந்நிலையில், உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த புகழேந்தி, கடந்த ஏப்ரல் 6ம் தேதி காலமானார்.
அதனால், அந்த தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.பொதுவாக ஒரு தொகுதியின் எம்எல்ஏ மரணமடைந்தால் அல்லது பதவியை ராஜினாமா செய்தால் அடுத்த 6 மாதத்திற்குள் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும்.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலுடன் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், அதுகுறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், விக்கிரவாண்டி உள்பட நாடு முழுவதும் 7 மாநிலங்களில் மொத்தம் 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை, தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.அதன்படி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு வரும் ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
விக்கிரவாண்டி தொகுதியில் வரும் 14ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கப்படும் என்றும், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் ஜூன் 21ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீது 24ம் தேதி பரிசீலனை செய்யப்படும் என்றும் மனுக்களை வாபஸ் பெற 26ம் தேதி கடைசி நாள் என்றும், இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூலை 13ம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
0 Comments