• Breaking News

    தமிழகத்தில் ஜெயலலிதாவின் வெற்றிடத்தை பாஜக நிரப்பி வருகிறது - அண்ணாமலை பேட்டி

     

    தலைநகர் டெல்லியில் நாளை (சனிக்கிழமை) தேர்தல் நடக்கிறது. இதனை முன்னிட்டு தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார்.

    இந்த நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அண்ணாமலை பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை பா.ஜனதா நிரப்பி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலக்க வாக்குப்பங்கை பெற்று தென் மாநிலத்தில் 3-வது பெரிய கட்சியாக உருவெடுக்கும். அ.தி.மு.க. இந்துத்துவா சித்தாந்தத்தில் இருந்து விலகிச் செல்வதால் அதை நிரப்ப பா.ஜனதாவுக்கு வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    2014-ம் ஆண்டுக்கு முன்புவரை ஒரு இந்து வாக்காளரின் இயல்பான தேர்வு அ.தி.மு.க.வாகத்தான் இருந்தது. ஜெயலலிதா தனது இந்து அடையாளத்தை வெளிப்படையாக காட்டினார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவு தெரிவிப்பதற்கும், மதமாற்ற தடைச்சட்டத்தை அமல்படுத்துவதற்கும் நாட்டிலேயே முதல் அரசியல்வாதியாக நின்றார்.

    ஆனால் 2016-ம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு இந்துத்துவா கொள்கைகளில் இருந்து அ.தி.மு.க. விலகிவிட்டது. தமிழகத்தில் கோவில்களை காக்கும் ஒரு கட்சியை இந்துக்கள் தேடுகிறார்கள் என்றால் அது இயல்பாகவே பா.ஜனதாவாகத்தான் இருக்கும். ஏனென்றால் ஜெயலலிதாவிடம் இருந்து அ.தி.மு.க. வெகு தொலைவுக்கு விலகிவிட்டது. 2014-ல் மோடி ஆட்சிக்கு வந்தது, ஜெயலலிதா மறைந்தது ஆகிய 2 காரணங்களால்தான் தமிழகத்தில் பா.ஜனதா பெரிய இடத்தைப் பிடித்தது என்று நான் சொல்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

    No comments