பெலிக்ஸ் ஜெரால்டை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதி.....
பெண் காவலர்களை இழிவாக பேசிய சவுக்கு சங்கரின் வீடியோவை யூடியூப் சேனலில் வெளியிட்ட விவகாரத்தில் பெலிக்ஸ் ஜெரால்டை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதன் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்ட், சவுக்கு சங்கரை நேர்காணல் செய்திருந்தார். அப்போது பெண் காவலர்கள் குறித்து சவுக்கு சங்கர் இழிவாக பேசியதை, தனது யூடியூப் சேனலில் அப்படியே ஒளிபரப்பி இருந்தார். இந்த வீடியோ தொடர்பாக கோவை சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சவுக்கு சங்கரை கைது செய்தனர்.
இது தொடர்பாக திருச்சியில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து டெல்லியில் தலைமறைவாக இருந்த பெலிக்ஸ் ஜெரால்டை கைது செய்து தமிழகத்திற்கு அழைத்து வந்தனர். இந்த வீடியோ தொடர்பாக சென்னை, சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெலிக்ஸ் ஜெரால்டை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை சைபர் கிரைம் போலீஸார் கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று கோவை நீதிமன்றத்தில் நீதிபதி சரவணபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதற்காக திருச்சி சிறையில் இருந்த பெலிக்ஸ் ஜெரால்டை போலீஸார் கோவைக்கு அழைத்து வந்திருந்தனர். அப்போது போலீஸார் தரப்பில் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என அனுமதி கோரப்பட்டது. ஆனால் மனுவை விசாரித்த நீதிபதி, ஒரு நாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க கோவை சைபர் கிரைம் போலீஸாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். நாளை மாலை 4 மணிக்கு அவரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி, போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் பெலிக்ஸை போலீஸார் அழைத்துச் சென்றனர்.
No comments