நாமக்கல்: மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தனியார் கல்லூரியில் வருமான வரித்துறையினர் சோதனை
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள இலையம்பாளையம் பகுதியில் விவேகானந்தா கல்விக் குழுமங்கள் இயங்கி வருகிறது. இந்த குழுமத்தின் கீழ் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலை, அறிவியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி கல்லூரி என 18க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகிறது. சமீபத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற முடிந்த மக்களவைத் தேர்தலின் போது, நாமக்கல் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இந்த கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.இந்த கல்லூரிக் குழுமங்களின் தலைவராக கருணாநிதி என்பவர் உள்ளார்.
இவர் அதிமுக சார்பில் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினராக பதவி வகித்துள்ளார். மேலும் மக்களவையின் முன்னாள் துணை சபாநாயகரான தம்பிதுரையின் நெருங்கிய உறவினர் ஆவார்.இந்த நிலையில், இன்று சேலம் மற்றும் கோவை மண்டலத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் 20-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் வருகை தந்தனர். தொடர்ந்து இந்த குழுமத்திற்கு சொந்தமான 18 கல்லூரிகளின் வளாகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வருமான வரித்துறை சோதனையால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.
No comments