மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் மலையெனக் குவியும் குப்பைகள்.... துர்நாற்றத்தால் மக்கள் அவதி... உடனே அகற்றிட சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை
மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் மலையென குப்பைகள் கொட்டப்பட்டு கேட்பாரற்று கிடைக்கின்றது. மயிலாடுதுறை நகரத்தின் திருவாரூர் சாலையில் நுழைவாயிலாக விளங்குகின்ற சுப்பிரமணியபுரம் பகுதியில் நகரின் பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்படுகின்ற குப்பைகள், கோழி இறைச்சிக்கழிவுகள், இறக்கைகள், பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ குப்பைகள் கொட்டப்படுவதால் அப்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கும் அவ்வழியாக கடந்து செல்வோருக்கும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் கடந்து சில நாட்களாக பெய்த மழையினால் மோசமான துர்நாற்றம் வீசுவதால் சுவாசிக்க கூட முடியாமல் பெரியவர்கள் பெண்கள் குழந்தைகள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள். மேலும் தற்பொழுது நாடு முழுவதும் பரவி வருகின்ற ஒருவகை கொரோனா மற்றும் டெங்கு காய்ச்சல்கள் பரவுவதற்கும் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதற்கும் வழி வகுத்து விடுமோ என்னும் ஐயம் பொதுமக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. இவ்வகை சுகாதாரமற்ற துர்நாற்றம் வீசும் மாசடைந்த காற்றினை சுவாசிப்பதால் நுரையீரல் மற்றும் புற்றுநோய் பிரச்சனைகள் அதிகம் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குறிப்பிடுகிறார்கள்.
பொது மக்களின் நலன் கருதி மேற்படி பகுதிகளில் கொட்டப்படுகின்ற குப்பைகளை உடனடியாக தடுத்து நிறுத்துவதுடன், ஏற்கனவே கொட்டப்பட்டு மலையென குவிந்துள்ள குப்பைகளையும், இறைச்சி கழிவுகளையும் உடனடியாக அகற்றிட வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments