வேங்கைவயல் விவகாரம் : மணமேல்குடி காவல் நிலைய காவலரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது. தமிழகம் மட்டுமின்றி நாட்டையே உலுக்கிய இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வந்த நிலையில், சிபிசிஐடி போலீஸாருக்கு வழக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து கடந்த ஓராண்டிற்கும் மேலாக சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
![]() |
காவலர் முரளிராஜா |
சமீபத்தில் இந்த வழக்கு தொடர்பாக 5 சிறுவர்கள் உட்பட 31 பேருக்கு மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஒரு காவலர் உட்பட இருவருக்கு குரல் மாதிரி பரிசோதனையும் நடத்தப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து மேலும் மூவருக்கு குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டிருந்தது. தொலைபேசி அழைப்புகள் அடிப்படையில் இந்த குரல் மாதிரி பரிசோதனைகள் நடத்தப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் குரல் மாதிரி பரிசோதனை மேற்கொண்ட அதே பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம் என்பவரது மகன் முரளிராஜாவை விசாரணை நடத்த வேண்டும் என சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தனர். இதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்த நிலையில், இன்று காலை புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் முரளி ராஜா ஆஜரானார். முரளி ராஜா மணமேல்குடி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். அவர் புதுக்கோட்டை நிஜாம் காலனி பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு தனது தரப்பு வழக்கறிஞர்கள் மூவருடன் நேரில் வந்து ஆஜரானார். அவரிடம் சிபிசிஐடி போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட போதும் இதுவரை இந்த வழக்கில் விசாரணை நிறைவடையாமல் இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments