• Breaking News

    வங்ககடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி

     

    தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. இதற்கிடையே கடந்த 4-ந் தேதி 'அக்னி நட்சத்திரம்' எனப்படும் கத்திரி வெயிலும் தொடங்கியது. கத்திரி வெயில் தொடங்கிய பின்னர் வெயில் தாக்கம் அதிகரித்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தமிழக உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும் மழை பெய்து வருகிறது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது.

    இதற்கிடையே தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து, வரும் 24-ந் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிறகு, இது மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகரக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக, இன்று முதல் 25-ந் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். அந்த வகையில், இன்று தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை (வியாழக்கிழமை) தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 24-ந் தேதி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளது. பின்னர், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வருகிற 25-ந் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை இன்று ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    No comments