மண் சரிவு..... ஊட்டி மலை ரயில் சேவை ரத்து.....
தமிழ்நாடு முழுவதும் வருகிற 20ம் தேதி வரை கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் இன்று துவங்கி 20ம் தேதி வரை கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள், நீலகிரிக்கு வருவதை தவிர்க்குமாறும், மலைப்பாதைகளில் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை இயக்குமாறும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. மண்சரிவு ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டு, அதன் அருகில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க முகாம்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
ஆபத்தான நிலையில் உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்ற வருவாய்த்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தீயணைப்புத்துறையினர், பேரிடர் மீட்புப்படையினர், மின்வாரிய ஊழியர்கள், வருவாய்த்துறையினர் மற்றும் தன்னார்வர்லர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், உதகை மலை ரயில் பாதையில் பல்வேறு இடங்களில் நேற்று பெய்த கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை சீர்படுத்தும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஷில்குரோ, அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதையில் விழுந்துள்ள மண் மற்றும் பாறைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் இன்று ஒருநாள் மேட்டுப்பாளையம்-உதகை இடையேயான ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
No comments