கூவத்தூர்: கட்டுமான பணியின் போது மண்ணில் இருந்து கிளம்பிய பழங்கால சிலைகள்.....

 

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கூவத்தூர் கிராமத்தில் பழமை வாய்ந்த விசுவநாதர் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தரிசனம் செய்கின்றனர். இந்த கோயிலில் உள்ள பழைய கோயில் கட்டிடம் சேதமடைந்த நிலையில் இருந்ததால், அதனை அகற்றிவிட்டு புதிய கற்கோயில் அமைக்கும் பணி சமீபத்தில் துவங்கப்பட்டது. இதற்காக 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டு பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது.இதையொட்டி பழைய கோயிலின் அருகிலேயே பாலாலயம் செய்யப்பட்ட தற்காலிக கோயில் அமைக்கப்பட்டு பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் சமீபத்தில் இங்கு தோண்டிய போது இரண்டு சிறிய அளவிலான சாமி கற்சிலைகள் கிடைத்ததால், மிகுந்த கவனத்துடன் பணிகள் நடைபெற்று வந்தது. நேற்று பொக்லைன் மூலம் கற்களை அகற்றும் பணி நடைபெற்ற போது, பூமிக்கு அடியில் இருந்து ஒரு அடி உயரமுள்ள அழகிய முருகன் கற்சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.வள்ளி, தெய்வானை சமேதராக காட்சி தரும் இந்தக் கற்சிலை 14 -ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என வரலாற்று அறிஞர்கள் கணித்துள்ளனர். கி.பி 1000-மாவது ஆண்டில் இருந்து 250 முதல் 300 ஆண்டுகள் சோழர்கள் இப்பகுதியை ஆட்சி செய்துள்ளனர். அதன் பின்னர் பாண்டியர்கள் வசம் இப்பகுதி வந்துள்ளது. இதனால் பாண்டியர்கள் ஆட்சிக்காலத்தின் போது இந்த சிலை வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்த சிலையுடன் மேலும் சில சிலைகளும் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் எனவும், அவை இதே பகுதியில் மண்ணில் புதைந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. இந்த சிலையை அருகில் உள்ள கோயிலில் வைத்து பூஜை செய்யப்படுவதால் பொதுமக்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். அடுத்தடுத்து கற்சிலைகள் கிடைத்து வருவதால் இந்த பகுதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தி வேறு சிலைகள் ஏதேனும் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments