• Breaking News

    பண்ணை வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த ராஜேஷ் தாஸ்..... முன்னாள் மனைவி பீலா வெங்கடேஷ் புகார்.....

     

    பெண் எஸ்பி-க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு தொடர்பாக, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் உறுதி செய்தது. அதைத் தொடர்ந்து தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், அவரை கைது செய்ய சிபிசிஐடி போலீஸாருக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் ராஜேஷ் தாஸ் மீது அவரது முன்னாள் மனைவியும், ஐஏஎஸ் அதிகாரியுமான பீலா ராஜேஷ் புகார் ஒன்றை அளித்துள்ளார்.ராஜேஷ் தாஸ் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்ததை தொடர்ந்து, அவரிடம் இருந்து விவாகரத்து கோரி பீலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இதைத்தொடர்ந்து அரசிதழில் தனது பெயரை பீலா வெங்கடேஷ் எனவும் அவர் மாற்றியிருந்தார். 

    இந்நிலையில் தனக்கு சொந்தமான கேளம்பாக்கம் அடுத்த தையூர் பகுதியில் உள்ள பண்ணை வீட்டிற்குள் அத்துமீறி ராஜேஷ் தாஸ் நுழைய முயன்றதாக அவர் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். காவலாளியை தாக்கியதாகவும் அளிக்கப்பட்ட இந்த புகாரின் பேரில், 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள கேளம்பாக்கம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    No comments