• Breaking News

    சனி, ஞாயிறு விடுமுறை..... ஊட்டிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

     

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தற்போது மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதன்காரணமாகவும் கோடை விடுமுறை காரணமாகவும் ஊட்டிக்கு செல்ல பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது ஊட்டிக்கு காரில் செல்ல இ-பாஸ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதனால் அரசு பஸ்களில் ஊட்டி செல்ல பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

    இந்த நிலையில் சனி, ஞாயிறு விடுமுறை வருவதால் ஊட்டி செல்ல அதிகளவு பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இதனை கருத்தில் கொண்டு கோவையில் இருந்து ஊட்டிக்கு 30 அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதுகுறித்து கோவை கோட்ட போக்குவரத்து கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு விடுமுறையை கருத்தில் கொண்டு கோவையில் இருந்து ஊட்டிக்கு ஏற்கனவே இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதன்படி கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபாகாலனி புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊட்டிக்கு 10 சிறப்பு பஸ்களும், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு 20 சிறப்பு பஸ்களும் இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்படும்.இதுதவிர கோவையில் இருந்து மதுரை, தேனி, திருச்சி, சேலம் ஆகிய இடங்களுக்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் அரசு பஸ்களுடன் கூடுதலாக 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தால் மேலும் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    No comments