சாதி மதம் என இன பாகுபாடு கொண்டு பலரும் பிரிந்து கிடக்கும் சூழலில் அனைவரும் மனிதர்கள் எல்லோரும் சமம் எல்லோரும் சகோதரர்கள் என சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் உணர்த்துவதாக திருப்பூரில் நடைபெற்ற சம்பவம் அமைந்துள்ளது. இந்து மத கோவில் கட்ட தேவையான நிலம் இஸ்லாமிய மதத்தினர் கொடுப்பது என்பது மிகவும் அரிதான சம்பவம்.
அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் திருப்பூரில் அரங்கேறி உள்ளது.திருப்பூர் மாவட்டம் படியூர் அடுத்த ஓட்டப்பாளையம், ரோஸ் கார்டன் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் என அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றாக வசித்து வருகின்றனர். இங்கு இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த பள்ளி வாசல் உள்ளது. ஆனால் இந்து மக்கள் வழிபாடு செய்ய எந்த கோவிலும் இல்லாத நிலையில் கோவில் ஒன்று கட்ட வேண்டும் என எண்ணிய மக்கள் அதற்கு போதுமான இடம் இல்லாத சூழ்நிலையில் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வந்தனர்.
இதை அறிந்த இஸ்லாமியர்கள் அப்பகுதியில் உள்ள ஆர்எம்ஜே ரோஸ் கார்டன் முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசலுக்கு சொந்தமான ஆறு லட்சம் ரூபாய் மதிப்பிலான மூன்று சென்ட் நிலத்தை கோவில் கட்ட தானமாக வழங்கினர். இதனைத் தொடர்ந்து அந்த இடத்தில் கோவில் கட்டும் பணி நடைபெற்று தற்போது நிறைவடைந்துள்ளது.
இன்று கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், இஸ்லாமியர்கள் பள்ளிவாசலில் இருந்து 7 தட்டுகளில் சீர்வரிசை பொருட்களை எடுத்துக் கொண்டு மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து கோவிலுக்கு வழங்கினர். அப்போது இஸ்லாமியர்களுக்கு இந்து மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் கோவில் விழாவில் அன்னதானம் செய்யவும் இஸ்லாமியர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
0 Comments