• Breaking News

    8 மணி நேரமாக வீட்டிற்குள் பதுங்கி இருந்த சிறுத்தை..... மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை.....

     

    நீலகிரி மாவட்டம் வனப்பகுதி அதிகம் நிறைந்த பகுதி ஆகும். கூடலூர் அருகே உள்ள முதுமலை வனப்பகுதியில் புலிகள், யானைகள், காட்டு மாடுகள், கரடிகள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் வசிக்கின்றன. அவ்வப்போது இந்த வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி, குடியிருப்பு பகுதிகளின் அருகில் சுற்றித் திரிவது வாடிக்கையாக இருந்து வருகிறது. 

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு உதகை நகருக்குள் உள்ள குடியிருப்பிற்குள் சிறுத்தை ஒன்று புகுந்து அங்கிருந்தவர்களை கடித்து காயப்படுத்தியது. பின்னர் நீண்ட நேரம் போராட்டத்திற்குப் பிறகு சிறுத்தை தானாக வீட்டிற்குள் இருந்து வெளியேறி வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இதனால் இரண்டு நாட்களுக்கும் மேலாக பொதுமக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்திருந்தனர்.இந்நிலையில், அதே போன்று ஒரு சம்பவம் தற்போது கூடலூர் அருகே நடந்துள்ளது. கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை சேமுண்டி பகுதியில் பாப்பச்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மதியம் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டில் விவசாய உபகரணங்களை எடுக்க சென்றுள்ளார். அப்போது வீட்டில் ஏதோ உறுமல் சத்தம் கேட்டுள்ளது. அதைக்கேட்டு வீட்டில் இருந்து வெளியேறிய அவர் வீட்டை பூட்டி உள்ளார். ஜன்னல் வழியாக பார்த்தபோது வீட்டுக்குள் சிறுத்தை ஒன்று இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் 6 மணி நேரம் சிறுத்தையை பிடிப்பதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

    பத்துக்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் முழு கவச உடைய அணிந்து வீட்டை சுற்றி கண்காணித்து வந்தனர். இதையடுத்து சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். முதுமலையிலிருந்து கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு மயக்க ஊசி செலுத்தும் பணிகள் நடைபெற்றது. இதையடுத்து சுமார் 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வீட்டின் ஓட்டை பிரித்து சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. பின்னர் அந்த சிறுத்தையை பிடித்த வனத்துறையினர், அதனை முதுமலையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.

    No comments