காரைக்குடி: நடந்து சென்ற நகை வியாபாரியிடம் 80 பவுன் தங்கநகைகள் வழிப்பறி.....
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஐந்து விளக்கு சுந்தரம் செட்டியார் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் சென்னையில் இருந்து தங்கநகைகளை வாங்கி வந்து, காரைக்குடியில் உள்ள நகைக்கடைகளுக்கு விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்காக அடிக்கடி அவர் சென்னை-காரைக்குடி இடையே பயணித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சென்னை சென்று இருந்த சரவணன், அங்கு 80 சவரன் தங்க நகைகள் மற்றும் 7 கிலோ வெள்ளிக்கட்டிகளை வாங்கிக் கொண்டு பேருந்து மூலம் காரைக்குடி வருகை தந்துள்ளார்.இன்று காலை காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இறங்கிய அவர், அங்கிருந்து ஐந்து விளக்கு பகுதியில் உள்ள வீட்டிற்கு காலை 6 மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்தார். வீட்டின் அருகே சென்றபோது, அவரை 3 இருசக்கர வாகனங்களில் வந்த, முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்த 6 பேர் வழிமறித்துள்ளனர். அவர்கள் கைகளில் இருந்த கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்து நகை பையை பறித்துச் செல்ல முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன் கூச்சலிட்டு அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.அருகில் இருந்த வீடுகளில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது, மர்ம நபர்கள் சிலர், ஒருவரிடம் பையை பறிக்க முயன்று கொண்டிருப்பது தெரியவந்தது. அவருக்கு உதவி செய்ய அவர்கள் முயன்ற போது, அந்த கும்பலை சேர்ந்தவர்கள் வீட்டிலிருந்தவர்களையும் கத்தியைக் காட்டி மிரட்டி உள்ளனர்.
பின்னர் சரவணன் கையில் இருந்த பையை பறித்துக் கொண்ட 6 பேரும் அங்கிருந்து இரு சக்கர வாகனங்கள் மூலம் தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்தில் சரவணனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் காரைக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் அருகாமை வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த சில நாட்களாக காரைக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் இது போன்ற தங்கநகை விற்பனை செய்யும் நபர்களை குறி வைத்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருவது அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய பேருந்து நிலையத்திலிருந்து இறங்கி காரைக்குடி 100 அடி சாலையில் வெங்கடாசலம் என்பவர் நடந்து சென்றார்.
அப்போது இதே போன்ற ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்த 3 இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர், அவரிடமிருந்து லேப்டாப் மற்றும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். தொடர்ந்து இந்த சம்பவங்கள் காரணமாக நகைக்கடை தொழிலாளர்கள் மற்றும் நகை விற்பனை செய்பவர்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்து உள்ளனர். சம்பவ இடத்தில் காரைக்குடி துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments