ரூ.538.62 கோடி கடன் மோசடி வழக்கு..... ஜெட் ஏர்வேஸ் நிறுவனருக்கு இடைக்கால ஜாமீன்.....
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கனரா வங்கி கொடுத்த ரூ.538.62 கோடி கடனை மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இதேபோல், இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறையும் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்குப்பதிவு செய்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலை கைது செய்தது.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு நவம்பரில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தபோது, நரேஷ் கோயலின் மனைவி அனிதா கோயலும் கைது செய்யப்பட்டார். எனினும் அனிதா கோயலின் வயது, உடல்நிலையை கருதி அன்றைய தினமே சிறப்பு நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.இதற்கிடையே கடந்த பிப்ரவரியில் நரேஷ் கோயல், உடல்நல குறைபாட்டை கூறி, ஜாமீன் கேட்டு விண்ணப்பித்ததை ஏற்க சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், அவரை மருத்துவ சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.இந்நிலையில் இந்த வழக்கில் தகுதியின் அடிப்படையில் ஜாமீன் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக இடைக்கால ஜாமீன் கோரி, மும்பை உயர் நீதிமன்றத்தை நரேஷ் கோயல் அணுகினார்.
இந்த வழக்கு, நீதிபதி என்.ஜே. ஜமாதார் அடங்கிய ஒற்றை அமர்வு நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 75 வயதான நரேஷ் கோயல் புற்றுநோயுடன் போராடி வருவதால், மருத்துவம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என நரேஷ் கோயல் தரப்பில் நீதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, நரேஷ் கோயலுக்கு மருத்துவ காரணங்களுக்காக 2 மாதம் இடைக்கால ஜாமீன் வழங்கினார். மேலும், அவர் ரூ.1 லட்சம் பிணை தொகை செலுத்த வேண்டும் என்றும், விசாரணை நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி மும்பையை விட்டு வெளியேறக்கூடாது. நரேஷ் கோயல் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
No comments