ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி..... டிக்கெட் கட்டணம் ரூ.12000 பதிலாக ரூ.67000 வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு.....


கரூர் மாவட்டத்தில் அஸ்வின் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய குடும்பத்துடன் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெற்ற இசை புயல் ஏ.ஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ரூ‌.12,000 செலுத்தி டிக்கெட் வாங்கிய நிலையில் அந்த நிகழ்ச்சி மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு வேறு தேதியில் நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிலையில் அந்த நிகழ்ச்சியில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.

இதனால் டிக்கெட் பெறுவதற்காக தான் செலுத்திய பணத்தை திரும்பத் தர வேண்டும் என நிகழ்ச்சியை நடத்திய ஏசிடிசி நிறுவனத்திற்கு அவர் கடிதம் அனுப்பிய நிலையில் அந்த நிறுவனம் பணத்தை திரும்ப கொடுக்க மறுத்து விட்டதாக கூறி அவர் கரூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிமன்றம் இசை நிகழ்ச்சியை நடத்திய ஏசிடிசி அஸ்வினுக்கு பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. 

அதன்படி அவர் டிக்கெட் பெறுவதற்காக செலுத்திய கட்டணம் ரூ.12000, சேவை குறைபாட்டிற்காக ரூ.50,000, செலவுத்தொகை ரூ.5,000 என மொத்தம் 67,000 ரூபாய் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அந்த நிறுவனம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காததால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments