கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புதுப்பேட்டையை சேர்ந்தவர் முகமது யூசுப். இவரது மகன் முகமது இர்பான்(வயது 15). இவர், புதுப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றுள்ளார். இதையடுத்து பண்ருட்டியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படிக்க மாணவர் திட்டமிட்டார். இதற்காக மாற்றுச்சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் வாங்குவதற்காக நேற்று பெற்றோருடன் மாணவர், பள்ளிக்கூடத்திற்கு சென்றார்.
அங்கு அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள், சான்றிதழ்கள் தர வேண்டும் என்றால் பள்ளியின் குடிநீர் உள்ளிட்ட பராமரிப்பு செலவுக்காக ரூ.220 கேட்டதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை கொடுத்ததும், மாணவருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில் பள்ளி மாற்றுச்சான்றிதழில் மாணவர் முகமது இர்பானின் புகைப்படத்திற்கு பதிலாக ஒரு பெண் குழந்தையின் புகைப்படம் இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர் மற்றும் பெற்றோர், பள்ளியில் இருந்த அலுவலக ஊழியர்களிடம் சான்றிதழை காண்பித்து விளக்கம் கேட்டனர். உடனே அலுவலக ஊழியர்கள், அந்த மாற்றுச்சான்றிதழை பிடுங்கி கிழித்து குப்பை தொட்டியில் போட்டனர்.
இதற்கு விளக்கம் கேட்டு மாணவரின் பெற்றோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு அலுவலக ஊழியர்கள், ஆன்லைனில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து உயர் அதிகாரிகளிடம் கூறி வேறொரு மாற்றுச் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்வதாகவும் கூறினர்.
இதனை ஏற்றுக்கொள்ளாத மாணவரின் பெற்றோர், கிழிந்து குப்பை தொட்டியில் கிடந்த மாற்றுச்சான்றிதழை சேகரித்து, இது தொடர்பாக கல்வித்துறையில் புகார் அளிக்க இருப்பதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர். இதனால் அந்த பள்ளிக்கூடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
0 Comments