ஊருக்குள் புகுந்து 10 பேரை கடித்துக்குதறி காட்டுப்பன்றி அட்டகாசம் ..... 6 மணி நேரமாக போராடி பிடித்த வனத்துறை.....


விழுப்புரம் அருகே உள்ள சித்தானங்கூர் கிராமத்தில் பொதுமக்கள் நேற்று தங்களது வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 150 கிலோ எடை கொண்ட காட்டுப்பன்றி ஒன்று திடீரென அங்கிருந்தவர்களைத் தாக்கத் தொடங்கியது. இதைக்கண்டு பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடி வீட்டுக்குள் சென்று பூட்டி கொண்டனர்.அப்போது அந்த காட்டுப்பன்றி வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த ஏழுமலை என்பவரது மனைவி செல்வி (38) என்பவரை கடித்துக் குதறியது. இதைக் கண்ட அவரது கணவர் ஏழுமலை (42) காட்டுப் பன்றியை தடுக்க முயற்சித்த போது, அவரையும் அந்த காட்டுப்பன்றி கடித்துக் குதறியது.அதைத் தொடர்ந்து சிவக்குமார் (45), ஜெகநாதன் (50), விருத்தாம்பாள் (60), விக்னேஷ் (25), ராமமூர்த்தி (43) ஆகியோரை அந்த காட்டுப்பன்றி கடித்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தடி மற்றும் ஆயுதங்களை கொண்டு காட்டப்பன்றியை தாக்க முயற்சி செய்தனர். அப்போது அது மாமந்தூர் கிராமத்திற்குள் சென்று பரசுராமன் என்பவரை கடித்துவிட்டு அருகில் உள்ள கரும்பு தோட்டத்திற்குள் புகுந்து கொண்டது.இதை அறிந்த பொதுமக்கள் கரும்பு தோட்டத்தைச் சுற்றி வளைத்து அதனைப் பிடிக்க முயன்ற போது பிரபு என்பவரை அந்த காட்டுப்பன்றி கடித்துக் குதறியது. இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர், போலீஸார் ஆகியோர் விரைந்து வந்தனர். தொடர்ந்து அட்டகாசம் செய்த காட்டுப்பன்றியை பிடிக்க முயற்சித்த போது மற்றொருவரை அது காலில் கடித்துக் குதறியது. இதில் மயக்கம் அடைந்த அவர் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் உடனடியாக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.இதனிடையே மாலை நேரம் கடந்து கொண்டிருந்ததால் காட்டுப் பன்றியை பிடிக்க முடியுமா என்கிற சந்தேகம் எழுந்தது. வனத்துறையினர் டிரோன்கள் மூலம் கரும்புக் காட்டுக்குள் பன்றி பதுங்கி இருக்கும் இடத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். மூன்று டிராக்டர்களை கொண்டு கரும்புக் காட்டுக்குள் காட்டுப் பன்றியை தேடிய போது, அது வெளியில் வந்துள்ளது.

அப்போது வனத்துறையினர் விரித்திருந்த வலையில் அது சிக்கியது. இதையடுத்து அதனை வனத்துறையினர் வனப்பகுதியில் விடுவிப்பதற்காக எடுத்துச் சென்றனர். சுமார் 6 மணி நேரத்திற்கு பிறகு காட்டுப்பன்றி சிக்கியதால் பொதுமக்கள் சற்றே நிம்மதி அடைந்தனர். இருப்பினும் மீண்டும் இது போன்று நடக்காமல் இருக்க வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments