• Breaking News

    நாங்க ஓட்டு போட மாட்டோம்..... பூத் ஸ்லிப்பை திருப்பி கொடுத்த கிராம மக்கள்......

     

    வீடு வீடாகச் சென்று பூத் ஸ்லிப் கொடுத்த கிராம நிர்வாக அலுவலரிடம், பொதுமக்கள் அதனை வாங்க மறுத்து திருப்பிக் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    விழுப்புரம் அருகே ஜானகிபுரம் கிராமத்திலிருந்து கண்டமனாடி கிராமத்திற்குச் செல்லும் சாலையின் குறுக்கே, ரயில்வே கேட் ஒன்று அமைந்துள்ளது. மார்ச் 22-ம் தேதி இரவு இந்த ரயில்வே கேட் திடீரென மூடப்பட்டது. பாலம் அமைப்பதற்காக இந்த ரயில்வே கேட்டை மூடியதாக தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ரயில்வேயின் இந்த திடீர் நடவடிக்கை காரணமாக, ஜானகிபுரத்திலிருந்து, கண்டமனாடி, கொளத்தூர், பில்லூர், அரியலூர், சித்தாத்தூர், காவடிப்பாக்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லவும், அங்கிருந்து விழுப்புரம் நகரத்திற்குச் செல்லவும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளிக்குச் செல்லும் சிறுவர் சிறுமிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். மேலும், கண்டமனாடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை, மேல்நிலைப்பள்ளி, அஞ்சல் நிலையம், கூட்டுறவு வங்கி உள்ளிட்டவற்றுக்கும் சென்றுவர முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மூடப்பட்ட ரயில்வே கேட்டை மீண்டும் திறக்கக் கோரி சாலை மறியல் போராட்டம் நடத்திய பொதுமக்கள், வீடுகளில் கருப்புக் கொடி கட்டியும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தபோதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.இந்த நிலையில், இன்று கண்டமனாடி கிராம நிர்வாக அலுவலர் வீராசாமி, ஜானகிபுரம் பகுதியில் வீடு வீடாகச் சென்று பூத் ஸ்லிப்புகளை வழங்கியுள்ளார். ஆனால், ரயில்வே கேட் திறக்கும் வரை தாங்கள் ஓட்டுப்போடப் போவதில்லை என்று சொல்லி பூத் ஸ்லிப்களை வாங்க மறுத்தனர். ஒரு சில வீடுகளில் பூத் ஸ்லிப்களை வாங்கியவர்களும், கிராம நிர்வாக அலுவலரிடமே அவற்றை திரும்ப ஒப்படைத்தனர்.இதன் காரணமாக, யாருக்கும் பூத் ஸ்லிப்களை வழங்க முடியாமல் கிராம நிர்வாக அலுவலர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இந்த சம்பவம் விழுப்புரம் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சியினரும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ந்து போயுள்ளனர்.

    No comments