எம்பி ஆகிறார் அண்ணாமலை.....? தமிழக பாஜக தலைவராகும் வானதி சீனிவாசன்....? பாஜகவினர் கனவு பலிக்குமா.....
தமிழ்நாடு பாஜக மாநில தலைவராக அண்ணாமலை இருந்து வருகிறார். இவரது காலத்தில் அதிரடியான அரசியல் நடவடிக்கைகளால் பாஜக வளர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. திராவிட கட்சிகளான திமுக, அதிமுக இரண்டையும் ஒரே நேரத்தில் எதிர்ப்பதன் மூலம் திராவிட கட்சிகளுக்கு மாற்றான கட்சியாக பாஜகவை இவர் வளர்த்திருப்பதாக கூறப்படுகிறது. அனைத்து ஊர்களிலும் பூத் கமிட்டி அமைக்கும் அளவுக்கு பாஜக தமிழகத்தில் காலூன்றி இருக்கிறது.
அதனால் இந்த தேர்தலில் தமிழகத்தில் பாஜக தனியாக கூட்டணி அமைத்து தமிழகம் மற்றும் புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இந்த முறை குறிப்பிடத்தக்க வெற்றியை தமிழகத்தில் பெற்று விட வேண்டும் என்று பாஜக மேலிட தலைவர்களும் திட்டமிட்டு உழைத்து வருகின்றனர். பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டவர்கள் பலமுறை தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். மாநிலத் தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூரில் போட்டியிடும் சூழலில் அவர் வெற்றி பெற்று விடுவார் என்றும், அப்படி வெற்றி பெற்று டெல்லிக்கு சென்று விட்டால் தமிழ்நாட்டுக்கு தலைவர் மாற்றப்படலாம் என்றும் பாஜக வட்டாரத்தில் பேசுகிறார்கள். அண்ணாமலைக்கு பதிலாக அப்போது வானதி சீனிவாசன் தலைவராக நியமிக்கப்பட உள்ளார் என்றும், இந்த மாற்றம் ஜூன் 5-ம் தேதி அல்லது அதற்கு பிறகு நடக்க உள்ளதாகவும் பாஜகவினர் மத்தியில் பரபரப்பான பேச்சு இருந்து வருகிறது.
இந்த தகவல்கள் வெளியில் பரவி தமிழக அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இது பாஜகவினர் திட்டமிட்டு கிளப்பும் தகவல், அண்ணாமலை வெற்றி பெறுவது உறுதி என்பதாக மக்கள் மனதில் பதிய வைப்பதற்காக இந்த பரபரப்பை அவர்கள் கிளப்பியுள்ளார்கள் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
No comments