• Breaking News

    கிளி ஜோதிடர் கைது..... முட்டாள் திமுக அரசின் பழிவாங்கும் போக்கு - அன்புமணி ராமதாஸ் கண்டனம்


     கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் பிரச்சாரத்தின் போது கிளி ஜோதிடர்களிடம் ஜோதிடம் பார்த்தார். அப்போது அவர் வெற்றி பெறுவார் என ஜோதிடர் செல்வராஜ் என்பவர் தெரிவித்திருந்தார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவியது. இந்த நிலையில் தடை செய்யப்பட்ட பச்சைக்கிளிகளை வைத்து ஜோதிடம் பார்த்ததாக செல்வராஜ் உட்பட இரண்டு கிளி ஜோதிடர்களை கடலூர் மாவட்ட வனத்துறையினர் கைது செய்துள்ளனர். கிளியை கூண்டில் அடைத்து வைத்து ஜோதிடம் பார்ப்பது சட்டப்படி குற்றம் என வனத்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "கடலூர் தொகுதியில் தங்கர்பச்சான் வெற்றி என்று ஜோதிடம் கூறியதால் கிளி ஜோதிடர் கைது செய்யப்பட்டுள்ளார். முட்டாள் திமுக அரசின் பழிவாங்கும் போக்குக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். பாசிசத்தின் உச்சமான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. ஜோதிடர் கூறியதற்காக கிளி ஜோதிடரை கைது செய்த திமுக அரசு, தங்கர்பச்சானுக்கு வாக்களித்ததற்காக கடலூர் தொகுதியை சேர்ந்த லட்சக்கணக்கான மக்களை கைது செய்வார்களா? இந்த நடவடிக்கை மூலம் திமுகவின் தோல்வி பயம் அப்பட்டமாக தெரிகிறது.பகுத்தறிவு கட்சி என்று கூறிக் கொள்ளும் திமுகவால், ஜோதிடத்தில் நல்ல செய்தியை கூறியதைக் கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்த அளவிற்கு முட்டாள்தனத்திலும் மூடநம்பிக்கையிலும் அந்தக் கட்சி ஊறி இருக்கிறது என புரிந்து கொள்ளலாம். இப்போது கைது செய்யப்பட்டுள்ள ஜோதிடர் அதே இடத்தில் பல ஆண்டுகளாக ஜோதிடம் பார்த்து வருகிறார். அப்போதெல்லாம் அவர் கைது செய்யப்படவில்லை. மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக ஆவாரா என அவரது மனைவி நூற்றுக்கணக்கான ஜோதிடர்களிடம் கிளி ஜோதிடம் பார்த்திருப்பார். அந்த கிளி ஜோதிடர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

    மரங்களும், விலங்குகளும் அழிக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் திமுக அரசு, ஓர் ஏழை ஜோதிடரை கைது செய்து தனது வீரத்தை காட்டி இருக்கிறது. இதற்கு காரணமானவர்களுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டை மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    No comments