• Breaking News

    மின்சார கம்பி அறுந்து விழுந்து பெண் ரயில்வே ஊழியர் பலி

     

    சென்னையை அடுத்து வேப்பம்பட்டு குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி(57). ரயில்வே ஊழியரான இவருக்கு திருமணமாகி பிரபு மற்றும் ராஜேஷ் என்ற மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி குடும்பத்துடன் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

    மேலும் ராஜேஸ்வரியின் கணவர் ராஜேந்திரன் தெற்கு ரயில்வே அலுவலகத்தில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். இதனால் அவரது வேலையை ராஜேஸ்வரிக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் பேசின் பிரிட்ஜ் ரயில்வே அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்த ராஜேஸ்வரி இன்று காலை வீட்டுக்கு வெளியே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது வீட்டு அருகே இருந்த பழுதடைந்த மின்கம்பத்தில் இருந்து மின்சார கம்பி திடீரென அறுந்து ராஜேஸ்வரி மீது விழுந்தது. இதில் அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவரது மகன் பிரபு, செவ்வாய்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில் போலீஸார் விரைந்து வந்து ராஜேஸ்வரி உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சம்பவம் குறித்து செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் பிரபு புகார் அளித்தார். அதில், பல நாட்களாக வீட்டு அருகே உள்ள மின்கம்பம் பழுதடைந்து இருந்ததாகவும், இதுகுறித்து பலமுறை பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்று மின்கம்பி அறுந்து விழுந்து தன் தாய் உயிரிழந்தார். என் தாய் இறப்பிற்கு மின்வாரிய ஊழியர்களே காரணம். எனவே, மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து போலீஸார், இவ்விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர். ரயில்வே பெண் ஊழியர் மின்கம்பி அறுந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    No comments