திருச்சியில் ஜே.பி.நட்டாவின் ரோடு ஷோவுக்கு அனுமதி..... மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு.....
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக நேற்று இரவு திருச்சி வந்தடைந்தார். இன்று காலை முதல் அரியலூர் உள்ளிட்ட இடங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
முன்னதாக அவர் திருச்சியில் காந்தி மார்க்கெட் பகுதியில் ரோடு ஷோ நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதற்காக அனுமதி வேண்டி பாஜக சார்பில் திருச்சி மாநகர காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் காந்தி மார்க்கெட் முதல் மலைக்கோட்டை வரையிலான அந்த பகுதி மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள பகுதி, அது மட்டுமில்லாமல் திருச்சியில் மிகப்பெரிய காய்கறி சந்தை மற்றும் வணிக வளாகங்கள் உள்ள பகுதி என்பதால் அங்கு அனுமதிக்க முடியாது என்று காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இது குறித்து மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பாஜக சார்பில் முறையீடு செய்யப்பட்டது. இதை அவசர வழக்காக விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி முரளி சங்கர், அரசு தரப்பின் வாதத்தை ஏற்றுக் கொண்டு ரோடுஷோவை வேறு இடத்தில் நடத்த அனுமதிக்கலாம் என உத்தரவிட்டார்.
கண்ணப்பா ஹோட்டல் முதல் வி.எஸ்.ஐ. மருத்துவமனை வரை ரோடு நடத்திக்கொள்ள காவல்துறை அனுமதி வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.அதையடுத்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் ரோடு ஷோவை நீதிமன்றம் அனுமதித்துள்ள பாதையில் நடத்திட பாஜக ஏற்பாடுகளை செய்து வருகிறது.
No comments