ரூ.2 கோடி மதிப்பிலான தங்க நகைகளுடன் வலம் வரும் பீடா கடைக்காரர்
ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் உள்ள சத்தா பஜாரில் முல்சா புல்சா என்ற பெயரில் பீடா கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 93 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கடை இந்த பகுதியில் செயல்பட்டு வருகிறது. தாத்தா, தந்தை ஆகியோரிடம் இருந்து வந்த இந்த பாரம்பரிய வியாபாரத்தை, தற்போது பூல்சந்த் என்பவர் நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வரும் பெரும்பாலானவர்களும் பீடாவின் சுவைக்கு மயங்குகிறார்களோ இல்லையோ, இவரது தோற்றத்தை கண்டு மயங்கி விடுகிறார்கள்.உடல் முழுவதும் ஏராளமான தங்க நகைகளை அணிந்து கொண்டு அவர் கடையில் அமர்ந்திருப்பதை பார்ப்பதற்காகவே ஏராளமானோர் இங்கு வருகை தருகின்றனர்.
அவர் அணிந்திருக்கும் நகைகளின் மொத்த மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. எப்போதும் இவரது கடையில் இதன் காரணமாக கூட்டம் இருந்து கொண்டே இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். அணிந்திருக்கும் தங்கத்தின் மதிப்பிற்கும், இவர் கடையில் விற்பனை செய்யப்படும் பீடாவிற்கும் எவ்வித தொடர்பும் இருப்பதில்லை. 15 முதல் 20 ரூபாய் வரை மட்டுமே இவரது கடையில் பீடா விற்பனை செய்யப்பட்டு வருவதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.காதணிகள், பிரேஸ்லெட்டுகள், தங்க செயின்கள் உட்பட இரண்டு கிலோ எடையும், 2 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை அவர் தனது உடலில் அணிந்து இந்த வியாபாரத்தை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் இங்கு உணவு ரிவ்யூவிற்காக சென்ற நபர் ஒருவர், அவரது வீடியோவை பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டு இருந்தார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
No comments