ஓசூர் அருகே ரூ.15 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்
ஓசூர் அருகே உள்ள ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் தேர்தல் கண்காணிப்பு மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வாகனத்தில் ஏராளமான பெட்டகங்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் முழுவதும் தங்க நகைகளாக இருந்தன.
அதிலிருந்த 69 பெட்டிகளில் 45 பெட்டிகளில் உள்ள தங்க நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இருந்தன. மீதமுள்ள 24 பெட்டிகளில் இருந்த தங்கத்திற்கு எந்தவித ஆவணங்களும் இல்லாத நிலையில் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவை உரிய பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.ஓசூரில் இருந்து பெங்களூரு எடுத்து செல்லப்பட்ட இந்த நகைகள் பெங்களூரூவில் நகைக்கடைகளுக்காக ஆர்டர் பெற்று தயார் செய்யப்பட்டவை என்றும், ஆனால் அவற்றை எடுத்துச் செல்லும்போது உரிய ஆவணங்கள் இல்லாததும் தெரிய வந்துள்ளது. இத்தகைய வாகன சோதனைகளில் பெரும்பாலும் நகைக் கடைகளுக்கு எடுத்துச் செல்லப்படும் நகைகள் சிக்குவது வாடிக்கையாக உள்ளது.
இதற்குத் தீர்வு காண வேண்டும் என்று நகை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல வாகனச் சோதனையில் சிக்கும் பெரும்பாலான பணம் சிறு வியாபாரிகள் வியாபாரம் செய்த தொகையாக இருப்பதால் அதற்கும் உரிய தீர்வு காண வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
No comments