தாசில்தாருடன் வாக்குவாதம்..... பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் 10 பேர் மீது வழக்குப்பதிவு

 

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பரந்தூர், வளத்தூர், நாகப்பட்டு, நெல்வாய், தண்டலம், மேல்பொடவூர், மடப்புரம், ஏகனாபுரம், மேலேறி, அக்கம்மாபுரம், குணகரம்பாக்கம் உள்ளிட்ட 20 கிராமங்களை உள்ளடக்கி 5,746 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்புகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டு, பல்வேறு கட்ட பணிகளை மேற்கொண்டு தற்போது நிலம் கையகப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏகனாபுரம் கிராம மக்கள் 600 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மத்திய அரசோ, மாநில அரசோ பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதற்கான எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் கிராம மக்கள் கடந்த 19ம் தேதி நடைபெற்ற மக்களவை தேர்தலை புறக்கணித்தனர். ஏகனாபுரம் கிராமத்தில் 1,400 வாக்காளர்கள் உள்ள நிலையில் வெறும் 9 ஓட்டுக்களே பதிவாகின. இதையடுத்து வாக்குப்பதிவன்று அரசு ஊழியர்களை வாக்களிக்குமாறு அழைக்க சென்ற தாசில்தார் சுந்தரமூர்த்தியுடன் கிராம மக்கள் வாக்குவாதம் செய்துள்ளனர். இதனால் தாசில்தார் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

பின்னார் தாசில்தார் தன்னுடன் வாக்குவாதம் செய்தவர்கள் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, தேர்தல் பணி செய்ய வந்த தாசில்தாரை தடுத்ததாக, ஏகனாபுரம் கிராமத்தை சேர்ந்த எதிர்ப்பு குழுவினர் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் அனைவரும் இன்று சுங்குவார் சத்திரம் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில், சுங்குவார் சத்திரம் போலீஸ் நிலையத்தில் 10 பேரும் பொதுமக்களையும் திரட்டி வந்து ஆஜரானதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments