திமுக வேட்பாளர்கள் பட்டியல்,தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்கி 27-ந் தேதி வரை நடக்கிறது. தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய 3 கூட்டணிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
இதில் தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரை தொகுதி பங்கீடு அனைத்தும் நிறைவடைந்து விட்டன. அந்த கூட்டணியில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளை தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை கூட அறிவித்துவிட்டன. அதே நேரம் அ.தி.மு.க. வுக்கு பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளபோதிலும், இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தை முடியவில்லை.மற்றொரு அணியான பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்துள்ளன. இதில் பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எந்த தொகுதி என்று அறிவிக்கவில்லை. அதேபோல் மற்ற கட்சிகளுக்கும் விரைவில் தொகுதி உடன்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தி.மு.க. போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலையும், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவினர் வடிவமைத்த நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையையும் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (புதன்கிழமை) வெளியிட உள்ளார்.
தி.மு.க. நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல தேர்தல்களில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையே கதாநாயகனாக இருந்துள்ளதால், இந்த தேர்தலிலும் அப்படி ஒரு எதிர்பார்ப்பு உள்ளது.
No comments