புதுச்சேரி பள்ளி மாணவி கொலை: முக்கிய குற்றவாளி சிறையில் தற்கொலை முயற்சி

 

புதுச்சேரி சோலைநகர் பகுதியைச் சேர்ந்த 9 வயது பள்ளி மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சோலைநகரைச் சேர்ந்த விவேகானந்தன் (வயது 57), கஞ்சா ஆசாமி கருணாஸ் (19) ஆகியோரை கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.பிற கைதிகளால் இவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் இருப்பதால் சிறையில் இருவரும் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் விவேகானந்தன் மன அழுத்தத்திற்கு ஆளானதாக தெரிகிறது. சோப்பை கரைத்து குடிப்பது, மூச்சினை அடக்கி தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது, வாய் விட்டு கத்துவது, அறைக்குள் அங்கும், இங்கும் ஓடுவது என இருந்து வந்துள்ளார். அவரது இந்த நடவடிக்கையால் சிறைக்காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இந்தநிலையில் நேற்று விவேகானந்தன் தனது சட்டையை கழற்றி தனக்குத்தானே கழுத்தை இறுக்கி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதைப்பார்த்து, அவருடன் சிறையில் உள்ள கருணாஸ், அறையில் இருந்து சத்தம் போட்டுள்ளார். இதனால் சுதாரித்துக்கொண்டு வார்டன்கள் விரைந்து செயல்பட்டு விவேகானந்தனை தடுத்துள்ளனர்.இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளனர். மேற்கொண்டு அவர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விவேகானந்தன் சிறையில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதை சிறைத்துறை நிர்வாகம் மறுத்துள்ளது.இதுகுறித்து சிறைத்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 'மிகவும் முக்கியமான வழக்கில் கைதாகியுள்ள விவேகானந்தன், கருணாஸ் ஆகிய கைதிகள் பாதுகாப்பு கருதி தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைதி விவேகானந்தன் தற்கொலைக்கு முயன்ற நிகழ்வுகள் ஏதும் சிறையில் நடக்கவில்லை. அவர்கள் இருவரையும் 24 மணி நேரமும் சிறைத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்' என கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments