• Breaking News

    குழந்தை கடத்த வந்ததாக நினைத்து வட மாநில வாலிபருக்கு தர்ம அடி

     


    சென்னை திருவொற்றியூர் சென்பால்ஸ் சர்ச் அருகே நேற்றிரவு வடமாநில வாலிபர் ஒருவர் குப்பை பொறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு 2 வயது குழந்தை ஓன்று தனது தாத்தாவுடன் விளையாடிக் கொண்டிருந்தது. அங்கு வந்த வடமாநில வாலிபர், அந்த குழந்தையை நோக்கி கையை அசைத்ததாக கூறப்படுகிறது.

    இதனைப் பார்த்த முதியவர், குழந்தையைக் கடத்த வந்ததாக நினைத்து கூச்சலிட்டார். இதையடுத்து அங்கு ஒடி வந்த அப்பகுதி மக்கள் அந்த வட மாநில வாலிபரை பிடித்து தர்ம அடிக்கொடுத்து திருவெற்றியூர் போலீஸில் ஒப்படைத்தனர்.பின்னர் போலீஸார் படுமடைந்த வடமாநில வாலிபரை சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.‌ பின்னர் இச்சம்பவம் குறித்து திருவெற்றியூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அந்த இளைஞர் பீகார் மாநிலத்தை சேர்ந்த அவிதஷ்ரத்(30) என்பதும், அப்பகுதியில் குப்பை பொறுக்கி பிழைப்பு நடத்தி வந்ததும் தெரியவந்தது.

    மேலும் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட அவர், குழந்தை சிரித்ததைப் பார்த்து கை அசைத்ததை தவறாக புரிந்து கொண்டு குழந்தையை கடத்த வந்ததாக நினைத்து அவரைக் கும்பல் தாக்கியது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதற்கிடையே இச்சம்பவம் குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், திருவெற்றியூர் பகுதியில் குழந்தை கடத்துவதாக தவறான புரிந்து கொண்டு வடமாநில வாலிபர் நேற்று தாக்கப்பட்டதாகவும், சென்னையில் குழந்தை கடத்தல் தொடர்பாக பரவி வரும் செய்திகள் வதந்தி என்றும் சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

    மேலும், சென்னையில் நாளுக்கு நாள் பரவி வரும் குழந்தை கடத்தல் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும், சந்தேக நபர் குறித்து தெரிய வந்தால் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு தகவல் அளிக்க வேண்டும் எனக் காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கடந்த வாரம் இதே போல் எண்ணூர் பகுதியில் குழந்தையை கடத்த வந்ததாக நினைத்து வடமாநில வாலிபர் ஒருவரை பொதுமக்கள் தாக்கிய சம்பவம் அடங்குவதற்குள் குரோம்பேட்டையில் குழந்தை கடத்துவதாக நினைத்து ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வரும் திருநங்கை ஒருவரை அரை நிர்வாணப்படுத்தி கம்பத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் நடந்தது. இந்த நிலையில், தற்போது மேலும் ஒரு வட மாநில வாலிபர் தாக்கப்பட்ட சம்பவம் வட மாநில தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    No comments