• Breaking News

    எவனா இருந்தாலும் செருப்பால அடிப்பேன்...... செய்தியாளர்களிடம் ஆவேசமான திருநாவுக்கரசர்......

     

    விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி, காங்கிரஸில் இருந்து விலகி ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து, திருச்சி எம்பி.,யும், தமிழக முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவருமான திருநாவுக்கரசரும், பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் பரவியது. திருநாவுக்கரசருக்கு தனது சொந்த காங்கிரஸ் கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பி உள்ளதாலும், அவருக்கு மீண்டும் திருச்சி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்று பரவலாக பேசப்பட்டு வருவதாலும் பாஜகவுக்கு செல்லும் முடிவை எடுத்ததாகவும் கூறப்பட்டது.

    இந்த வதந்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திருச்சியில், மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் திருநாவுக்கரசர் எம்பி பங்கேற்றார். பின்னர், அவர் செய்தியாளர்களை சந்தித்தார். திருச்சி தொகுதி, திமுக அல்லது மதிமுகவிற்கு வழங்க இருப்பதாக வெளியான தகவல் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், "திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தங்ககளுக்கான தொகுதியை கேட்க தார்மீக உரிமை உள்ளது. ஏற்கனவே நான் எம்பி ஆக உள்ளேன். எனக்கும் அந்த உரிமையுள்ளது" என்றார்.

    திருச்சி எம்பி-யை கண்டா வர சொல்லுங்க என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் குறித்து கேள்வி கேட்டபோது, "நான் இங்கு வந்து கொண்டு தான் இருக்கிறேன். நீங்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள்" என்றார்.அந்த செய்தியாளர், ”மூன்று வருடமாக பார்க்கவில்லை. இப்பொழுது தான் பார்க்கிறேன்” என்று பதில் கூற, அதைக்கேட்டு கோபமடைந்த திருநாவுக்கரசர் "நீ எத்தனை முறை என்னை பார்த்தாய்"என்று ஒருமையில் பேசினார். தொடர்ந்து, "நீ எந்த பத்திரிக்கையை சேர்ந்தவர்? பணம் வாங்கிக் கொண்டு இதுபோன்ற கேள்விகளை கேட்கிறாய்” என்று ஆக்ரோஷமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதனை தொடர்ந்து திருநாவுக்கரசர் விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாக பரவும் தகவல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர்,"அந்த தகவலை பரப்பியவன் எவனாக இருந்தாலும் செருப்பால அடிப்பேன், இனி நானும் சீமானைப் போன்று பேச வேண்டும் போலிருக்கிறது" என்று ஆவேசமாக தெரிவித்தார்.

    No comments