அரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளித்த மூன்று இளைஞர்கள் மாயம்

 

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர், ஒரு வேன் மற்றும் ஒரு காரில் தஞ்சாவூருக்கு நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்துள்ளனர். அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றின் பகுதியில் வந்தபோது கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர்  செல்வதைக்கண்ட வேனில் வந்த இளைஞர்கள் 10 பேர் குளிப்பதற்காக இறங்கியுள்ளனர்.  

கொள்ளிடம் ஆற்றில் தற்போது திருமானூரை ஒட்டிய  கரையோரத்தில் தண்ணீர்  கொஞ்சமாக சென்று கொண்டுள்ளது. ஆனால் கடந்த மழைக்காலத்தில் ஆற்றில் அதிக வெள்ளம் வந்தபோது பாலத்தின் அருகில் கரை ஓரத்தில் ஆற்றில்  சுமார் 30 அடிக்கும் மேலாக பள்ளம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் தற்போது அதிகளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனை அறியாத இளைஞர்கள் ஆர்வத்துடன் அப்பகுதியில் குளித்துள்ளனர். அரை மணி நேரத்துக்கும் மேலாக அவர்கள் உற்சாக  குளியல் போட்ட நிலையில்  அவர்களில் சந்தானம்(16), பச்சையப்பன்(15), தீனதயாளன்(20 ஆகிய 3 இளைஞர்கள் தண்ணீரில் மூழ்கியதாக தெரிகிறது. உடன் குளித்த இளைஞர்கள் 3 பேரை காணவில்லை என்பதை அறிந்து தேடிப் பார்த்துள்ளனர். அப்படியும் அவர்களைக் காணவில்லை. அதனால் அனைவரும் கரைக்குத் திரும்பினர். இதையடுத்து தங்களுடன் வந்து காரில் திரும்பி  சென்றவர்களுக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு திருமானூர் போலீஸார் மற்றும் அரியலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்துவந்து நீரில் மூழ்கிய 3 இளைஞர்களை தேடி வருகின்றனர். காணாமல் போன இளைஞர்களுடன் வந்திருந்தவர்களும், உறவினர்களும் கதறி அழுதனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments