உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல்
தமிழக அரசு சார்பில் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரு தேதிகளில் #OneTrillionDreams என்ற பிரச்சாரத்துடன் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக மாநிலத்தின் தொழில் துறை உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் வியக்கத்தக்க மனிதர்களின் வெற்றிக் கதைகளை விவரிக்கும் நிகழ்வு நடைபெறுகிறது.
அந்த வகையில் கிராமத்து சமையலை வித்தியாசமாக வழங்கி சமூக ஊடகங்களில் மக்களை கவர்ந்தவர்கள் தி வில்லேஜ் குக்கிங் எனும் யூடியூப் சேனல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.
புதுக்கோட்டையில் உள்ள சின்ன வீரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்கள் நடத்தும் யூடியூப் சேனலை பெரியதம்பி, அய்யனார், முத்துமாணிக்கம், முருகேசன், தமிழ் செல்வன், சுப்பிரமணியன் ஆகிய 6 பேர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இவர்களது யூடியூப் சேனலுக்கு 2.33 கோடி சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.
இவர்களுடைய வீடியோக்களே பெரும்பாலும் 100 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெறும். உலக அளவில் நடந்த ஒரு நிகழ்வில் இவர்களும் கலந்து கொண்டது இவர்களுடைய கிராமத்திற்கே பெருமையை தேடி தந்துவிட்டதாக பெருமிதம் கொள்கிறார்கள். இவர்கள் 2018 ஆம் ஆண்டு சேனலை ஆரம்பித்தார்கள்.
முதலில் பல சறுக்கல்களை கண்டிருந்தாலும் கரையான்கள் குறித்த சமையல் வீடியோ வைரலானதை அடுத்து இவர்களுக்கு வியூஸ் அதிகம் கிடைத்து வருகிறது. ஒரு மாதத்திற்கு 3 அல்லது 4 வீடியோக்களை வெளியிடுகிறார்கள். இவர்கள் மாதம் ரூ 10 லட்சம் சம்பாதிக்கிறார்கள். அதில் வரி செலுத்திவிட்டு மீதமுள்ள தொகையை பிரித்துக் கொள்கிறார்கள்.
இவர்கள் கிரியேட்டிவ் எக்கனாமி (ஆக்கப்பூர்வமான பொருளாதாரம்) என்ற தலைப்பில் பேசுவதற்காக வந்துள்ளார்கள். இதுகுறித்து அந்த குழுவினர் கூறுகையில் இன்று உலக அரங்கில் பேசுவதற்கு தமிழக அரசு எங்களுக்கு கொடுத்த மிக பெரிய வாய்ப்பாகவே பார்க்கிறோம். நிறைய பேர் குக்கிங் சேனல் வைத்திருக்கிறார்கள்.
ஆனால் கிராமத்தில் இருந்து வந்த எங்களுக்கு உலக அரங்கில் அங்கீகாரம் கொடுத்துள்ளார்கள். இதன் மூலம் எங்களுக்கு பொறுப்பு கூடிவிட்டது. குருவி தலையில் பனங்காய் வைத்த கதை போல் எங்களுக்கு பொறுப்பு கூடிவிட்டது. இந்த வாய்ப்பை வைத்து தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக நாங்கள் நடந்து கொள்வோம். இவ்வாறு அந்த 6 பேரும் தெரிவித்தனர்.
No comments