@ கட்டுத்தடிக்காரன் மாவீரன் கொங்கு குணாளன் நாடாரின் வரலாற்று தொகுப்பு
நாட்டின் விடுதலைக்காகத் தன் வாழ்வையும், வசந்தத்தையும் தியாகம் செய்த கொங்கின் முதல் சுதந்திர போராட்ட மாவீரன்.
கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த வெள்ளைக்கார கும்பினி படையினருக்கு சிம்மசொப்பனமாக இருந்து, தனது இறுதி மூச்சு வரை அடிபணியாமல், அவர்களை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்தவர். பல்வேறு போர்க்கலைகளையும்,போர்நுனுக்கத்தையும், கற்றுத் தேர்ந்து, துணிச்சலான போர் யுக்திகளைத் தனது படைகளுக்குக் கற்றுத் தந்து, இந்திய விடுதலைப் போரில் பங்கேற்று, ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியை கருவறுக்க எண்ணினார்.
ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியாவை மீட்க மைசூர் மன்னன் திப்பு சுல்தான் உடன் இணைந்து, வெள்ளைக்கார கும்பினி படையை எதிர்த்த அவர் பலமுறை வெற்றியும் கண்டார்.
கொங்கு மண்ணில் பிறந்து, வீரத்திற்கு அடையாளமாக விளங்கி, தான் மறைந்தாலும் தனது புகழ் எப்போதும் நிலைத்திருக்குமாறு செய்த கொங்கு மாவீரன் குணாளன் நாடார் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் ஆங்கில கும்பினி படைகளை எதிர்த்த போர்கள் பற்றி அறிய அவர் வீர வரலாற்றை காண்போம்.
பிறப்பு: கி.பி. 1757 ஜனவரி 18 க்கு தை மாதம் 5ம் நாள்.
பிறப்பிடம்: நொய்யல் ஆற்றங்கரையில் இருந்த காரையூர்.
ஈரோடு அருகில்..
(குணாளன் நாடாரின் வெள்ளையர் எதிர்ப்பால் பின்னாளில் அந்த ஊர் தீயிட்டு எறிக்கப்பட்ட்து. அதனால் குணாளனின் வம்சாவளி பங்காளிகள் அந்த ஊரை விட்டே வெளியேறி அவினாசி மற்றும் நம்பியூர் பகுதிகளில் குடும்பத்துடன் குடியேறிவிட்டார்கள்.)
இறப்பு: ஜூலை 31, 1805
சிறப்பு பெயர் : "கட்டுதடிக்காரன்"
படை வீரர்களை வழி நடத்தி செல்லும் தடியுடன் (swagger) எப்போதும் அவர் காணப்படுவதால் அந்தப் பெயர் வந்தது..
வாழ்ந்தகாலம் :48 வயது
"கட்டுத்தடிக்காரன் முன்நடக்க அவன் கருப்புச்சேர்வையும் பின்நடக்க வட்டப்பொட்டுக்கார சின்னமலை வார சவுரியம் பாருங்கடி" என்ற நாட்டுப்புற பாடல் கொங்கு மண்ணில் இன்றளவும் கிராமங்களில் இந்த கும்மிபாட்டு பாடப்பட்டு வருகிறது.
கொங்கு மாவீரன் குணாளன் அவர்கள், தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இருக்கும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கயம் அருகிலுள்ள நொய்யல் ஆற்றங்கரையில் இருந்த காரையூர் என்னும் ஊரில் முத்தப்பன் நாடார், காளியம்மாள் தமபதியருக்கு மகனாக ஜனவரி மாதம் 18 ஆம் தேதி, 1757 ஆம் ஆண்டில் பிறந்தார். அவருக்குப் பெற்றோரிட்ட பெயர் தீர்த்தகிரி "குணாளன்"
குணாளனின் பெற்றோர் ஏகப்பட்ட நில புலன்களுடன் ஜமீன்தார்களாக வாழ்ந்து வந்தனர். அரண்மனை போன்ற தொட்டிக்கட்டு விடு, ஏகப்பட்ட ஆடுமாடுகளுடன் பெரும் செல்வந்தர்களாக வாழ்ந்தனர்..
தங்கள் ஆன் மகனை சீரும் சிறுப்புமாக வளர்த்தனர்.
குணாளனின் ஒரே தங்கை கருப்பாத்தாள். அவரை நத்தக்காட்டுப்பாளையத்துக்கு திருமணம் செய்து கொடுத்தார்கள். அவருடைய வாரிசுகள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்.
குணாளன் பள்ளிக்கு செல்லும் வயது வந்தவுடன் காங்கேயம் அருகிலுள்ள மேலப்பாளையம் எனும் ஊரில் இருந்த வைரமுத்து என்ற ஆசிரியரிடம் கல்வி மற்றும் போர்க்கலைகளான வாள்பயிற்சி, வில்பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம், தடிவரிசை, போன்றவற்றைக் கற்று கொள்ள சேர்த்தனர்.. பல தற்காப்புகலைகள் அறிந்திருந்ததாலும், அவர் அக்கலைகளைத் தன் நண்பர்களுக்கும் கற்றுக் கொடுத்து, சிறந்த போர்ப்பயிற்சி அளித்து, அவரது தலைமையில் இளம்வயதிலேயே ஓர் படையைத் திரட்டினார்.
"கட்டுதடிக்காரன்" குணாளன் நாடார் வளர வளர நாட்டில், ஆங்கிலேயர்களின் ஆதிக்கமும் வளர்ந்தது. இதை சிறிதளவும் விரும்பாத குணாளன் நாடார் அவர்களைக் கடுமையாக எதிர்த்தார். அச்சமயத்தில், அதாவது டிசம்பர் மாதம் 7ஆம் தேதி, 1782 ஆம் ஆண்டில் மைசூர் மன்னர் மரணமடைந்ததால், அவரது மகனான திப்பு சுல்தான் அவர்களை ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். அவரும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை வேரோடு வெட்ட எண்ணினார். இதுவே, இவரின் நட்புறவுக்கு சாதகமாக அமைந்தது. ஆகவே, அவரது நண்பர்களோடு அவர் ஒரு பெரும் படையைத் திரட்டி, மைசூர் மன்னர் திப்பு சுல்தானுடன் கைக்கோர்க்க முற்பட்டார். ஏற்கனவே, திப்புவின் தந்தையை எதிர்த்த நிகழ்வையும், குணாளன் நாடாரின் வீரத்தையும் பற்றி அறிந்த திப்பு சுல்தான், அவருடன் கூட்டணி அமைத்தார். குணாளனின் நாடாரின் தலைமையிலான கொங்கு படை சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போன்ற இடங்களில், ஆங்கிலேயர்களை எதிர்த்து நடந்த மூன்று மைசூர் போர்களில் ஆங்கிலேயர்களின் படைகளுக்குப் பெரும் சேதம் விளைவித்து, வெற்றிவாகை சூடியது. சீரங்க பட்டினத்தில் இருந்தபோது திப்புவின் மற்றோரு படைத்தளபதி "அம்ஜத்' என்பவரை துரோகத்தால் கொன்ற "வில்லியம்ஸ்' என்ற ஆங்கிலேய வேலைக்காரனை அவன் வழியிலேயே மாறுவேடத்தில் சென்று வெட்டிக் கொன்றார்.
மூன்று மைசூர் போர்களிலும், திப்புசுல்தான் – பல்வேறு சமூகங்ளை ஒன்றினைத்து கொண்டு குணாளன் நாடார் தலைமையேற்ற கொங்கு படை கூட்டணி வெற்றியடைந்ததைக் கண்டு வெகுண்டெழுந்த ஆங்கிலேயர்கள், பல புதிய போர் யுக்திகளைக் கையாளத் திட்டம் தீட்டினர். இதனால், திப்பு சுல்தான், தனது பீரங்கி படையை முழு வீச்சில் இறக்கினார். இருந்தாலும், கன்னட நாட்டின் போர்வாளும், மைசூர் மன்னருமான திப்பு சுல்தான் அவர்கள், நான்காம் மைசூர் போரில், மே மாதம் 4 ஆம் தேதி, 1799 ஆம் ஆண்டில் போர்க்களத்திலே வீரமரணமடைந்தார்.
அதனால், திப்புவின் போர்த்தளபதிகளாக இருந்த குணாளன் நாடார் மற்றும் தீரன் சின்னமலை கவுண்டர் மற்றும் கொங்கு படையினர் தமிழகம் திரும்பினர்.
திப்பு சுல்தான் அவர்களின் வீரமரணத்திற்குப் பின்னர், கொங்கு நாட்டில் உள்ள "ஓடாநிலை" என்னும் ஊரில் கோட்டை கட்ட பேருதவியாக பொருள் திரட்டி தந்தார் குணாளன் நாடார். மேலும் காவிரிக்கரையில் தன் படையுடன் தங்கியிருந்து கொங்கு நாட்டின் காவல்காரனாக விளங்கினார்..
திப்புவின் மரணத்திற்குப் பழிதீர்க்கும் வண்ணமாக, சிவன்மலை காட்டில் தனது வீரர்களுக்குப் பயிற்சி அளித்து, பிரெஞ்சுக்காரர்கள் உதவியோடு பீரங்கிகள் போன்ற போர் ஆயுதங்களையும் தயாரித்தனர் பின்னர், கி.பி 1799ல் கொங்கு படைகளைப் பெருக்கும் விதமாக, திப்புவிடம் பணிபுரிந்த முக்கியமான சிறந்த போர்வீரர்களை கொங்குபடையில் சேர்த்ததோடு அண்டை நாட்டில் உள்ள பாளையக்காரர்கள் அனைவரையும் ஒன்று திரட்டினர்.
லெஃப்டினன்ட் கர்னல் கேக்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ஆம் பட்டாளத்தை அழிக்க எண்ணி ஜூன் மாதம் 3 ஆம் தேதி, 1800 ஆம் ஆண்டில், கோவைக்கோட்டையைத் தகர்க்கத் திட்டமிட்டனர். சரியான தகவல் பரிமாற்றங்கள் இல்லாத ஒரே காரணத்தால், கோவைப்புரட்சி தோல்வியுற்றது. 1801ல், பிரெஞ்சுக்காரரான கர்னல் மாக்ஸ் வெல் தலைமையில் ஆங்கிலேயர்களை பவானி-காவிரிக்கரையில் எதிர்த்து வெற்றிக் கண்டணர். அந்த வெற்றியைத் தொடர்ந்து, 1802ல் சென்னிமலைக்கும் சிவன் மலைக்குமிடையே நடந்த போரில் அதிவேக "கட்டுத்தடி" சிலம்பம் சுற்றி தாக்கி ஆங்கிலப்படையைத் தவிடுபொடியாக்கி, 1803ல் அறச்சலூரில் உள்ள கர்னல் ஹாரிஸின் ஆங்கிலப்படையை கையெறிகுண்டுகள் வீசி வெற்றி கண்டனர்.
இருந்தபோதும் தனது நன்பனை காக்கவும், தாய்நாட்டை காக்கவும் கருமலைக்காட்டில் ரகசியமாக தங்கி இருந்தனர்.இது குணாளன் நாடாருக்கு பிடிக்காவிட்டாலும் தனது நன்பனையும்,நாட்டையும் காப்பதற்காகவே சம்மதித்தார்.
ஆங்கிலேயர்கள் பலரையும் தோல்விக்குள்ளாக்கி, அவர்களை தலைகுனியச் செய்த மாவீரன் கொங்கு குணாளன் நாடாரை சூழ்ச்சியால் வீழ்த்த எண்ணிய ஆங்கிலேயர்கள், கருமலை காட்டில் ரகசியமாக தங்கி வாழ்ந்த கட்டுதடிக்காரன் குணாளன்நாடார், தீரன்சின்னமலை கவுண்டர் மற்றும் சில முக்கிய தளபதிகளை பிடிக்க நல்லப்பன் என்ற சமையல்காரனுக்கு ஆசை வார்த்தைகள் காட்டி, அந்த மாவீரர்களையும் உடன் இருந்தவர்களை கைது செய்தனர். கைது செய்து அவர்களை, சங்ககிரி மலை கோட்டைக்குக் கொண்டு சென்ற ஆங்கிலேயர்கள், ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிட்டனர். "கட்டுதடிக்காரன்" என்கிற மாவீரன் கொங்கு குணாளன் நாடார் தூக்கு கயிற்றை முத்தமிட்டு வீரமரணமடைந்தார்.
இங்ஙனம் :
மாநில தகவல் தொழில்நுட்பஅணி
தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கம்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments