தவழ்ந்து தவழ்ந்து உயர்ந்த பதவிக்கு வந்தேன் உண்மையை ஒப்புக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி.....
மதுரையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் நடைபெற்ற மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாட்டில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், ”நான் முதலமைச்சராக ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. உங்களைப் போல் நானும் அமர்ந்திருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக தவழ்ந்து தவழ்ந்து உயர்ந்த பதவிக்கு வந்தேன். அதைக் கூட இன்றைய முதலமைச்சர் கொச்சைப்படுத்தி பேசுகிறார். உழைப்பு என்றால் என்ன என்று தெரியாத முதலமைச்சர் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வருகிறார். நான் கிளைச் செயலாளராக இருந்து படிப்படியாக உழைத்து, அதிமுகவுக்கு பொதுச்செயலாளராக ஆனேன். ஆனால் அவரது அப்பா முதலமைச்சராக இருந்ததால் இன்று முதலமைச்சராக ஆகியுள்ளார்” என்றார்.
மேலும், “நாட்டு மக்களைப் பற்றி கவலைப்படாமல் வீட்டு மக்களைப் பற்றி கவலைப்படுபவராக முதலமைச்சர் உள்ளார். இன்றைக்கு நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சுமார் 3000 பேர் கலந்து கொள்வார்கள் என்று கூறுகிறார்கள். மூன்றாயிரம் பேரா தொழில் செய்ய வருகிறார்கள். இது போர்ஜரி. ஏற்கனவே நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெற்ற முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? மக்களை ஏமாற்றுவது என்பது திமுகவுக்கு கைவந்த கலை. கருணாநிதி ஆட்சி செய்தார். பின்னர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தார். இப்போது அவரது மகன் ஆட்சிக்கு வரவேண்டும் என துடிக்கிறார். ஆனால் நாட்டு மக்கள் குறித்து அவர்களுக்கு எந்த கவலையும் கிடையாது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “நிதியமைச்சர் மெத்த படித்தவர், பொருளாதார நிபுணர். உதயநிதியும், சபரீசனும் 30 ஆயிரம் கோடியை கையில் வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தடுமாறுவதாக கூறுகிறார். ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி கொள்ளை அடித்தது தான் திமுகவின் சாதனையாக மக்கள் பார்க்கிறார்கள். இந்த பணம் சிறுபான்மை மக்களின் வளத்திற்கு பயன்பட்டிருந்தால் அவர்கள் மகிழ்ச்சியாக உங்களை பாராட்டி இருப்பார்கள்” என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர்.கே.ராஜு, ஆர். பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு ஆகியோரும் பங்கேற்றனர்.
கொஞ்சம் கொஞ்சமாக தவழ்ந்து தவழ்ந்து உயர்ந்த பதவிக்கு வந்தேன் என எடப்பாடி பழனிச்சாமி கூறியதை இப்போதாவது உண்மையை ஒப்புக்கொண்டாரே என பொதுமக்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
No comments