• Breaking News

    காங்கிரஸ் தலைவர்களுக்கு ராமர் முக்கியமல்ல பாபர் தான் முக்கியம்...... கண்டுபிடித்த பாஜக......

     


    அயோத்தி ராமர் கோயிலுக்கான குடமுழுக்கு விழா ஜன.22 அன்று நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் கோலாகலமாக தயாராகி வருகின்றன. அரசியல் ரீதியாக பாஜகவுக்கு எதிர்முகாமில் உள்ள சிலரும் ராமர் கோயில் விழாவில் பங்கேற்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.


    ஆனால், சோனியா, கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தங்களது மறுதலிப்பை மரியாதையுடன் தெரிவித்துள்ளனர். ‘பாஜக - ஆர்எஸ்எஸ் அமைப்புகள் ராமர் கோயில் விழாவை அரசியலாக்குகின்றன; முடிவடையாத திருப்பணிகளின் மத்தியில் அவசரமாக குடமுழுக்கு திட்டமிடப்பட்டிருக்கிறது’ உள்ளிட்டவற்றை தங்களது நிராகரிப்பின் காரணங்களாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.


    அழைப்பு விடுத்தும் அதனை மறுத்த காங்கிரஸ் தலைவர்களை, பாஜவினர் கடுமையாக சாடி வருகின்றனர். பாஜகவின் தேஜஸ்வி சூர்யா ”தீய சக்திகளைத் தடுக்கும் ஹனுமான் சாலிசாவை பக்தர்கள் உச்சரிப்பதே, ராமர் கோயில் அழைப்பை காங்கிரஸ் தலைவர்கள் நிராகரிக்க காரணமாகி உள்ளது” என்றார்.


    அசாம் மாநிலத்தின் பாஜக முதல்வரும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா, அயோத்தி விழாவை காங்கிரஸ் தலைவர்கள் புறக்கணித்ததன் பின்னணியில் இன்னொரு காரணத்தை கண்டுபிடித்துள்ளார். “ராமரை விட பாபருக்கே காங்கிரஸ் தலைவணங்கும். காங்கிரஸ் தலைவர்கள் தங்களது பாவங்களைப் போக்குவதற்கான வாய்ப்பை இழந்துள்ளனர். இதற்கு மேலும் காங்கிரஸுக்கு என்ன உதவி செய்ய முடியும்? அவர்கள் தங்கள் பாவங்களைக் குறைக்க விரும்பவில்லை. நேரு முதல் ராகுல் வரை, அவர்கள் அனைவரும் பாபரையே விரும்புகின்றனர்" என்று ஹிமந்தா சாடி உள்ளார்.


    உடன் ஆப்கானிஸ்தான் காபூலில் பாபர் கல்லறையை காணச்சென்ற ராகுல் காந்தியின் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இதற்கு முந்தைய சாடல் ஒன்றில், “காங்கிரஸ் தலைவர்கள் ஜன.22 ராமர் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது நல்லது. அவர்களின் இருப்பு நல்ல நிகழ்வைக் கெடுத்துவிடும்” என்று கேலி செய்திருந்தார்.

    No comments