• Breaking News

    செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: எதற்காக வழக்கு தொடர்ந்தீர்கள்? அமலாக்கத்துறையிடம் நீதிபதி காட்டம்

     


    சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆறு மாதங்களுக்கு மேலாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜி ஏற்கெனவே இரு முறை ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார். அப்போதெல்லாம் அமலாக்கத்துறை சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சாட்சிகளை, ஆதாரங்களை கலைத்துவிட வாய்ப்பு இருக்கிறது என அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. செந்தில் பாலாஜியின் தம்பி அசோக், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாததையும் காரணமாக கூறப்பட்டிருந்தது.


    இருமுறை ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருந்த நிலையில் மூன்றாவது முறையாக செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இது தொடர்பான விசாரணை கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி அல்லி, வழக்கு விசாரணையை ஜனவரி 8ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தார்.


    இன்று விசாரணை தொடங்கியபோது அமலாக்கத்துறை சார்பில் இளம் வழக்கறிஞர் ஆஜரானார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை மூத்த வழக்கறிஞர் ஆஜராக உள்ளதாகவும், அதனால் வழக்கு விசாரணையை சிறிது நேரத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.


    அதற்கு நீதிபதி அல்லி, “எதற்காக தள்ளி வைக்க வேண்டும்? பதில் மனுத் தாக்கல் செய்ய சொல்லியும் இன்னும் செய்யவில்லை. பதில் மனுத் தாக்கல் செய்ய முடியாதவர்கள் எதற்காக வழக்கு தொடர்ந்தீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார். அதன் பின்னர் சற்று நேரம் தள்ளி வைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிபதி வழக்கை நாளை ஒத்தி வைத்தார்.

    No comments