பொங்கல் வாழ்த்து போஸ்டர் ஒட்டிய சீமானின் தம்பிகள் மீது தாக்குதல்
பொங்கல் வாழ்த்து சுவரொட்டி ஒட்டிய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை நீலிக்கோணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆசிக் மற்றும் பாலாஜி ஆகிய இருவரும் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்களாக உள்ளனர். இருவரும் நேற்று இரவு அதே பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொங்கல் வாழ்த்து சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சில மர்ம நபர்கள், இருவருடனும் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், மர்ம நபர்கள் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து இருவரையும் அடித்து தாக்கியுள்ளனர். இதில் இருவருக்கும் ரத்தக்காயம் ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த நாம் தமிழர் கட்சியினர், அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
ஆனால் புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி, ஏராளமான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். அதனை தொடர்ந்து போலீஸார் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் யார் என விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், கூடிய விரைவில் யார் இந்த குற்றத்தை செய்தார்கள் என்பது கண்டறியப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதனை தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் காவல் நிலையம் அமைந்துள்ள திருச்சி சாலை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
No comments