கேரளாவில் இன்று இரவு பெட்ரோல் பங்குகள் இயங்காது
பெட்ரோல் பங்குகள், உணவகங்கள், கடைகள் உள்ளிட்ட பொது வர்த்தக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் சிலர், அங்குள்ள ஊழியர்களிடம் தகராறு ஈடுபடுவதும், தாக்குவதும் அண்மைக் காலமாக நாடு முழுவதும் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர்களை வாகன ஓட்டிகள் சிலர் தாக்கியது பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது.
இதைத்தொடர்ந்து கேரளாவில் இன்று இரவு 8 மணி முதல் நாளை அதிகாலை 6:00 மணி வரை அனைத்து பெட்ரோல் பங்குகளும் இயங்காது என்று கேரள பெட்ரோலிய வர்த்தகர்கள் கூட்டமைப்பு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது தாக்குதலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்காத அரசைக் கண்டித்து இந்த போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்டல பூஜைகள் முடிந்து மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு செல்லும் தமிழக பக்தர்கள் எண்ணிக்கை மிக அதிக அளவில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இன்று இரவு பெட்ரோல் பங்குகள் மூடப்படும் செய்தியை முன்கூட்டியே தெரிந்து கொண்டு அங்கு செல்லும் தமிழக வாகன ஓட்டிகள் தமிழக பகுதிகளிலேயே எரிபொருள் நிரப்பி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments