மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற இதை செய்ய வேண்டும்...... மேயர் பிரியாவிடம் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்......
சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வார்டு உறுப்பினர்கள் கேள்விகளுக்கு மேயர் பிரியா பதிலுரை வழங்கினார்.
அப்போது திமுக கவுன்சிலர் சிற்றரசு, ‘’ சென்னை பெரு வெள்ளத்தில் சாலைகள் மிகவும் மோசமாக பழுதடைந்துள்ளன. சாலைகள் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நிதியினை பெற்று அவற்றை சரி செய்ய வேண்டும். அப்போதுதான் மக்களை நாம் சந்திக்க முடியும். மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் நாம் இதனை செய்தாக வேண்டும்.
மேயர் இது தொடர்பாக முதல்வரிடம் பேசி உரிய நிதியினை பெற வேண்டும். சாலைகள் சீரமைக்கப்பட்டால்தான் சென்னையில் உள்ள 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் அதிக வாக்குகளைப் பெற முடியும் என கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய திமுக கவுன்சிலர் கண்ணன், ‘’மேயர் சக்தி வாய்ந்தவராக இருக்க வேண்டும். அப்போதுதான் அதிகாரிகள் செவிசாய்ப்பார்கள். மேயர் அதிகாரம் மிக்கவராக இருந்தால் தான் கவுன்சிலர்களும் அதிகாரம் மிக்கவர்களாக வலம் வர முடியும்’’ என்றார்.
No comments