• Breaking News

    புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி வெட்டிக்கொலை.....

     


    திருவள்ளூர் மாவட்டம் தாழவேடு பகுதியைச் சேர்ந்த புரட்சி பாரதம் கட்சியின் ஒன்றியச் செயலாளர் அசோக் என்பவரை, கஞ்சா போதையில் 3 பேர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



    தமிழகத்தில் கஞ்சா, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க காவல்துறையினர் கடுமையாக நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு தமிழகத்தில் கஞ்சாவே இல்லை என்ற நிலையை உருவாக்க அரசு தரப்பிலும் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



    திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள தாழவேடு பகுதியில் சமத்துவபுரம் அமைந்துள்ளது. இதன் நுழைவு வாயில் முன்பு அதே ஊரைச் சேர்ந்த புரட்சி பாரதம் கட்சியின் திருவாலங்காடு மேற்கு ஒன்றிய செயலாளர் அசோக் என்பவர் நேற்று இரவு நடந்து வந்துகொண்டிருந்தார்.


    அப்போது மூன்று பேர் கொண்ட மர்மக் கும்பல் அங்கு வந்தது. அவர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தி உள்ளிட்ட கத்திகளைக் கொண்டு அசோக்கை சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே அசோக் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.


    மேலும், இந்தச் சம்பவத்தின்போது அங்கு கடை வைத்து நடத்தி வரும் கலையரசன் என்பவர் தடுக்க முயன்றுள்ளார். ஆனால், அந்த மர்மக் கும்பல் அவரின் கையிலும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளது. 



    இந்த தகவல் அறிந்து அங்கு வந்த அப்பகுதி மக்களும், அசோக்கின் மனைவி மற்றும் அவரது உறவினர்களும் அவரது உடலைப் பார்த்து கதறி அழுதனர். அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள், திருத்தணி போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.


    அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், அசோக் உடலைக் கைப்பற்ற முயன்றனர். அப்போது அந்தப் பகுதி மக்களும், அசோக்கின் உறவினர்களும் இணைந்து கொலை செய்த நபர்களை கைது செய்த பிறகே உடலை அங்கிருந்து எடுக்க அனுமதிப்போம் என வாதிட்டனர்.


    தொடர்ந்து போலீஸார் அவர்களிடம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்ததின் பேரில், அவர்கள் சமாதானம் அடைந்தனர். பிறகு உடலைக் கைப்பற்றிய போலீஸார், திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 


    கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பகுதியில் கஞ்சா விற்பனையை அமோகமாக நடைபெற்று வந்த நிலையில், அதனை போலீஸாரிடம் அசோக்குமார் தகவல் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மர்மக் கும்பல் அவரை படுகொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    No comments