வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாடா சுமோவுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்

 


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மூதூர் திரவுபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சிவபாதம்(42). ஆட்டோ ஓட்டுநரான இவர் நேற்ரீரவு வழக்கம் போல் அவரது வீட்டின் முன்பாக தனது ஆட்டோவை நிறுத்தி வைத்துள்ளார். அதன் அருகிலேயே தனக்கு சொந்தமான டாடா சுமோவையும் நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில், இரவு 11 மணியளவில் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிவபாதம் வீட்டின் கதவைத் தட்டி ஆட்டோ தீ பற்றி எரிவதாகத் தெரிவித்தார்.


இதைக்கேட்டு பதறியடித்து ஓடி வந்த சிவபாதம் அங்கு தனது ஆட்டோவும், டாடா சுமோவும் கொழுந்து விட்டு எரிவதை கண்டு அதிர்ந்து போனார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், அவருடன் சேர்ந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றார். ஆனால், தீ கட்டுக்கடங்காததால், தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் டாடா சுமோ முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.


இதுதொடர்பாக, சிவபாதம் அரக்கோணம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த செயலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் ஆட்டோ மற்றும் டாடா சுமோவுக்கு தீ வைப்பதற்கு முன்பாக, அப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மாரில் மின்சாரத்தைத் துண்டித்துள்ளனர். இதனால், இரவு முழுவதும் அப்பகுதி மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்தனர். அதைத்தொடர்ந்து இன்று காலையில் துண்டிக்கப்பட்ட மின்சாரம் சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் விநியோகிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அரக்கோணம் தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும், சிவபாதம் அளித்த புகார் மனுவில் சந்தேகப்படும் படியாக மூன்று பேரின் பெயர் விவரங்கள் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த மூன்று பேரின் செல்போன் எண்ணின் விவரங்களை போலீஸார் ஆராய்ந்து விசாரித்து வருகின்றனர். அதே நேரம், ஆட்டோவில் பெட்ரோல் குண்டு வீசியதற்கான சாட்சியமாகப் பாட்டில் ஒன்று ஆட்டோ அருகில் இருந்ததை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். இது காவல் துறையினருக்குக் கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவத்தில் உள்ளூர் வாலிபர்கள் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments