செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு.... சென்னைக்கு ஆபத்து...? கலெக்டர் சொன்னது என்ன?

 


செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 12 ஆயிரம் கன அடி வரை நீர் திறந்தாலும், சென்னைக்கு பிரச்சினை இல்லை என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.


சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. 24 அடி நீர்மட்டம் கொண்ட ஏரியில் தற்போது 22.41 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. அணை மொத்த கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதாலும், நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால், நீர்வரத்தும் அதிகரித்து வருவதால், ஏரியின் பாதுகாப்பு கருதி இன்று காலை 6 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது.



இதனிடையே நீர்வரத்து குறைந்ததால் நீர் திறப்பு 4 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது நீர்வரத்து, நீர்திறப்பு ஆகியவை குறித்து அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் ஏரி மற்றும் அடையாறு ஆற்றின் கரையோரங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாகவும் கேட்டறிந்தார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ நீர்வரத்திற்கு ஏற்ப நீர் திறப்பு இருந்து வருகிறது. ஏரியின் நிலவரம் குறித்து உடனுக்குடன் முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று அவரது அறிவுறுத்தலுடன் செயல்பட்டு வருகிறோம். அடையாறு ஆற்றின் கரைகள் கடந்த சில ஆண்டுகளில் தூர்வாரி தயார் நிலையில் உள்ளது. ஏரியில் இருந்து 12 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டாலும் சென்னைக்கு பிரச்சினை இருக்காது. ஏரியை பார்வையிட வருபவர்கள் ஏரிக்குள் இறங்காமல் இருக்க, தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்” என்றார்.

Post a Comment

0 Comments