• Breaking News

    கிளாம்பாக்கத்திலிருந்து தென்மாவட்டங்களுக்கு ஜனவரி 1 முதல் பேருந்துகள் இயக்கம்

     


    கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், “தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அரசு விரைவு பேருந்துகள்(SETC) பேருந்துகள் ஜன. 1-ம் தேதி அதிகாலை 4 மணி முதல் கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் பேருந்துகள் கோயம்பேடு வரை இயக்கப்படாது. இனி கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும். கிளாம்பாக்கத்தில் இருந்து மாநகர பேருந்துகள் நாளை முதல் அனைத்து பகுதிகளுக்கும் இயக்கப்படும்.



    விரைவு பேருந்து செயல்பாடுகள் உடனடியாக நடைமுறைக்கு வரும். அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அல்லாத மற்ற ஆறு போக்குவரத்து கழகங்கள் - விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய ஆறு அரசு போக்குவரத்து கழகங்களுடைய பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கம் வந்து அந்தந்த வழித் தடத்தில் இயங்கும். பொங்கல் வரை இந்த நிலை நீடிக்கும்.


    பொங்கலுக்கு பிறகு அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்து தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கு இயக்கப்படும். 1,140 புறப்பாடுகள் பொங்கல் வரை கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கம் வழியாக இயக்கப்படும். அதேபோல் ஆம்னி பேருந்துகளும், பொங்கல் பண்டிகைக்கு பிறகு இங்கிருந்து இயக்கப்படும்.



    சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் டிச. 31-ம் தேதி காலையிலிருந்து ( இன்று ) சென்னையின் அனைத்து பகுதிகளுக்கும் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படும். மாநகர போக்குவரத்துக் கழகத்தை பொறுத்தவரை கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு கிளாம்பாக்கத்திலிருந்து 270 நடைகள் இயக்கப்படும். ஐந்து நிமிடத்துக்கு ஒரு பேருந்து இங்கிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு செல்லும்.


    மேலும், அதேபோல தாம்பரத்துக்கு 2 நிமிடத்துக்கு ஒரு பேருந்து கிளாம்பாக்கத்திலிருந்து புறப்படும். கிண்டிக்கு செல்லும் மாநகர போக்குவரத்து பேருந்துகள் மூன்று நிமிடத்துக்கு ஒரு பேருந்து என்ற அளவில் இயக்கப்படும். ஏற்கெனவே இந்த வழித் தடத்தில் 2,386 நடை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்போது கூடுதலாக 1,691 நடை பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. எனவே, மொத்தம் 4,077 நடைகள் கிளாம்பாக்கத்தின் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

    No comments