'குடி'மகன்களுக்கு கும்மாளம்: நள்ளிரவு 1 மணிவரை மதுக்கடைகள் திறந்திருக்கும்
ஆண்டின் கடைசிநாளான இன்றே உலகமெங்கும் புத்தாண்டை வரவேற்கும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. மேலும், ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொடர் விடுமுறை காரணமாக இன்றே புத்தாண்டு கொண்டாட்டங்கள் உற்சாகமெடுத்துள்ளது. அதுவும் கொண்டாட்டங்களின் சிறப்பிடமான புதுச்சேரி புத்தாண்டை குதூகலமாக வரவேற்கிறது. அதில் மதுப்பிரியர்களை திருப்திபடுத்தும் மற்றொரு அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
வழக்கமாக புதுச்சேரியில் மற்ற நாட்களில் நள்ளிரவு 12 மணி வரை மட்டுமே மது விற்பனைக்கு அனுமதி அளிக்கப்படும் நிலையில் இந்த முறை புத்தாண்டை ஒட்டி, ஒரு மணி நேரம் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் கூடும் சுற்றுலா நகரமான புதுச்சேரியில் புத்தாண்டையொட்டி, தங்கும் அறைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இன்றிரவு 1 மணி வரை மது கிடைக்கும் என்பதால் ஏற்கனவே புதுச்சேரியில் முகாமிட்டுள்ள சுற்றுலா பயணிகள் குதூகலமடைந்திருக்கின்றனர். கேளிக்கை விடுதிகள் மற்றும் மது விற்பனை செய்யப்படும் இடங்களில் சிறப்பு அனுமதி கிடைத்திருப்பதை அடுத்து இன்று மதுவிற்பனை அதிகளவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு கேளிக்கை விடுதிகளும் அதிரடி ஆஃபர்களை அளித்துள்ளதால், கூட்டம் அலைமோதுகிறது.
புதுச்சேரிக்கு செல்லும் இளைஞர்கள் பாதுகாப்பாக பயணம் செய்யும் வகையில் சாலைகளில் ஆங்காங்கே காவல்துறை சோதனைச்சாவடிகளை அமைத்து கண்காணிப்புப்பணிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் எந்தவித அசம்பாவிதங்களுக்கும் இடம் கொடுக்காதபடி புத்தாண்டை கொண்டாட வேண்டும் என மக்களுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
No comments