போஸ்டரில் சம்பவம்.... பதறிய உடன் பிறப்புகள்.....
தஞ்சாவூரில் சமீபத்தில் ஒருநாள். சாலையோர சுவர் முழுவதும் ‘மது விலக்கு நம் இலக்கு’ என்ற போஸ்டர்கள். அதுவும் பளிச்சென கருப்பு - சிவப்பு பின்னணியில் பிரமாதம் காட்டின. இதைப் பார்த்துவிட்டு ‘அச்சச்சோ... என்ன இது’ என்று, ஆளும் திமுகவினரே கொஞ்சம் ஆடிப்போனார்கள்.
அமைச்சர் முத்துசாமி பொறுப்பானவர். “புதிதாக மது குடிக்க வரும் இளைஞர்களுக்கு கவுன்சலிங் கொடுத்து நல்வழிப்படுத்த வேண்டும்” என்றெல்லாம் அவர் சொன்னாலும், “காலையில் வேலைக்குப் போகிறவர்கள் தவிர்க்க முடியாமல் மது அருந்துகிறார்கள். அவர்களை குடிகாரன் என்று யாராவது சொன்னால் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது” என்று, அரசுக்கு வருவாய் கொடுக்கும் மதுப்பிரிய அன்பர்களுக்கு வாக்காலத்து வாங்கியவர்.
அப்படியிருக்க, ‘மது விலக்கு நம் இலக்கு’ என்று போஸ்டர் ஒட்டியது எந்த கருப்பு ஆடு... டாஸ்மாக் பார் டெண்டர் கிடைக்காத யாராவது இப்படி செய்துவிட்டார்களா? என்று கதிகலங்கி நின்றனர் கருப்பு சிவப்பு உடன்பிறப்புகள். கூடவே, அதே போஸ்டரில், ‘உங்கள் ஆதரவை பதிவு செய்ய அருகே உள்ள கியூஆர் கோடை ஸ்கேன் செய்யவும்’ என்ற வாசகம்.
தெளிவாக இருந்த குடிமக்களும், விவரமான உடன்பிறப்புகளும் அதிர்ந்துபோய், அந்த கியூஆர் கோடை அவசரமாய் ஸ்கேன் செய்ய... அதுவோ, ‘நீட் தேர்வுக்கு உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யுங்கள்’ என்ற வலைதளத்துக்குள் கொண்டுபோய் விட்டது. ‘என்ன இது, மது விலக்கு என்று க்ளிக் செய்தால், நீட் விலக்கு என்ற தளத்துக்கு போகிறதே என்று பல பேர் சரக்குப் போடாமலே கிறுகிறுத்தனர். அப்படியும் ஆர்வக் கோளாறு விடவில்லை, மதுவுக்கும் நீட்டுக்கும் என்ன சம்பந்தம் என்ற குழப்பத்துடன் மீண்டும் போஸ்டரை உற்றுப் பார்த்தனர்.
மறுபடியும் கண்ணாடியைக் கழற்றி துடைத்து மாட்டிக் கொண்டு பார்த்த போதுதான், ‘நீட் விலக்கு நம் இலக்கு’ என்று ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களில் எல்லாம், ‘நீட்’ என்பதை மறைத்து ‘மது’ என்ற துண்டுப் போஸ்டரை யாரோ சில குசும்புக்காரர்கள் நேக்காக ஒட்டிவிட்டுப் போயிருக்கிறார்கள் என்பது தெரியவந்தது.
அதானே பார்த்தேன்... என்று நிம்மதிப் பெருமூச்சுவிட்ட உடன்பிறப்புகளும், கடமையே கண்ணான குடிமக்களும் மாங்கு மாங்கென ஓடி மதுவிலக்கு போஸ்டர்களை ஒன்றுவிடாமல் கிழிக்க ஆரம்பித்தார்கள்!
No comments