சாத்தூர் அருகே மூளை காய்ச்சலால் பலியான சிறுவன்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா மேட்டமலை கிராமம் அம்பேத்கர் காலனியை சேர்ந்த கருப்பசாமி சித்ரா தம்பதியினர், பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வருகிறார்கள்.இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளது இவர்களின் இளைய மகன் நிதிஷ்குமார் (10) மேட்டமலை அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 4ம் தேதி சிறுவனுக்கு காய்ச்சல் அடித்துள்ளது சாதாரணமான காய்ச்சலாக இருக்கும் என சாத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர், அங்கே ஒரு நாள் முழுவதும் சிகிச்சை எடுத்துள்ளார்.
மேலும் சிறுவனின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததாலும் போதிய அளவு மருத்துவத்திற்கு செலவழிக்க பணம் இல்லாததால், சிறுவனின் பெற்றோர்கள் தனியார் மருத்துவமனை மருத்துவர்களின் பரிந்துரைப்படி மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு மூளை காய்ச்சல் என பெற்றோரிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சிறுவனின் உடல் பகுதி ஒவ்வொன்றாக செயலிழந்து சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சிறுவன் உயிர் இழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் சிறுவனின் பெற்றோர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது இந்த பகுதியில் பன்றிகள் அதிகமாக இருப்பதாலும், ஊராட்சி நிர்வாகம் சார்பில் முறையாக கழிவுநீர் குப்பைகள் போன்றவற்றை முறையாக அப்புறப்படுத்தாததால், கடந்த சில மாதங்களாகவே டெங்கு மற்றும் பல நோய்கள் பரவி பொதுமக்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் இன்று இந்த சிறுவன் உயிர் இழந்துள்ளதாகவும்,சுகாதார துறை சார்பில் மருத்துவ முகாம் மற்றும் கொசு மருந்து அடித்தல் போன்ற எந்த பணிகளும் முறையாக நடைபெறவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினார்கள்.
மேலும் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு நிதி உதவி அளித்து மேலும் இதுபோல் நோய்கள் பரவாத வண்ணம் ஊராட்சி நிர்வாகமும் சுகாதார துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
No comments