மாமூல் வேட்டையில் இறங்கிய போலி எஸ்.ஐ கைது
சென்னை வடபழனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் அப்பகுதியில் உள்ள ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் மிரட்டி பணம் பறித்து வருவதாக வடபழனி உதவி ஆணையருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வடபழனி உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீஸார் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் வடபழனி பகுதியில் உள்ள மசாஜ் சென்டரில் உதவி ஆய்வாளர் உடையில் இன்று வந்த ஒருவர் அங்கு பணம் கேட்டு மிரட்டியுள்ளார். தகவல் அறிந்து உடனே அங்கு சென்ற தனிப்படை போலீஸார் அந்த நபரை பிடித்து வடபழனி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் ராமாபுரம் வெங்கடேஸ்வர நகர் 2வது தெருவைச் சேர்ந்த அஸ்வின்(30) என்பதும் இவர் நான்கு ஆண்டு முன்பு டிராபிக் வார்டனாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
மேலும் அஸ்வின் காவல் உதவி ஆய்வாளர் உடையை வாடகைக்கு எடுத்து தனது புல்லட்டில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டி கொண்டு ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் கடந்த சில நாட்களாக பணம் பறித்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீஸார் அஸ்வினிடம் இருந்து காவல் உதவி ஆய்வாளர் உடை மற்றும் இருசக்கர வாகனம், போலி அடையாள அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட அஸ்வினிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் வடபழனி பகுதியில் ஒருவர் போலீஸ் உடையில் மாமூல் வசூலித்து வந்த சம்பவம் காவல்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments