கர்நாடகா பாஜக தலைவராக எடியூரப்பா மகன் நியமனத்தின் பின்னனி இதோ.....
கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வியை அடைந்தது. இதனைத் தொடர்ந்து கர்நாடகா மாநில பாஜக தலைவர் பதவியில் இருந்து நளின் குமார் கட்டீல் ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 6 மாதங்களாக கர்நாடகா மாநில புதிய பாஜக தலைவர் நியமிக்கப்படாமல் இருந்தது. அதேபோல கர்நாடகா மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரையும் பாஜக நியமிக்காமல் இருந்தது.
இந்த இரண்டு விவகாரங்களை முன்வைத்து பாஜகவை, காங்கிரஸ் தலைவர்கள் மிக கடுமையாக விமர்சித்து வந்தனர். அதே நேரத்தில் இந்த இரு பதவிகளுக்கும் கர்நாடகா பாஜக தலைவர்கள் பலரும் முட்டி மோதிக் கொண்டனர். இதனால் பாஜக மேலிடம் எந்த முடிவும் எடுக்காமல் தத்தளித்துக் கொண்டே இருந்தது.
தற்போது கர்நாடகா மாநில பாஜக தலைவராக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் பிஒய் விஜயேந்திரா எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளார்.
எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா வழக்கறிஞர். இவர் பாஜக மாநில இளைஞர் அணி செயலாளராகவும் இருந்தார். 2020-ம் ஆண்டு கர்நாடகா மாநில பாஜக துணைத் தலைவராக விஜயேந்திரா நியமிக்கப்பட்டார். எடியூரப்பாவின் கோட்டையான ஷிகாரிபுராவில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் விஜயேந்திரா. எடியூரப்பாவின் இன்னொரு மகன் ராகவேந்திரா, ஷிமோகா லோக்சபா தொகுதி எம்.பி.யாக உள்ளார்.
கர்நாடகா மாநில பாஜக தலைவர் பதவியை மகனுக்குப் பெற்றுத் தர வேண்டும் என்பதற்காக டெல்லி மேலிடத்திடம் கடுமையாக போராடியிருந்தார் எடியூரப்பா. பாஜக ஆட்சி மன்ற குழுவில் எடியூரப்பா இடம் பெற்றிருக்கிறார். கர்நாடகாவில் பெரும்பான்மை சாதிகளில் ஒன்றான லிங்காயத்துகளின் வாக்குகளைத் தக்க வைக்க எடியூரப்பாவுக்கு தொடர்ந்து பாஜக மேலிடம் முக்கியத்தும் தந்து வருகிறது. இதே லிங்காயத்துகள் வாக்குகளை காரணம் காட்டியே மகனுக்கும் மாநில தலைவர் பதவியை வாங்கி கொடுத்து இப்போது சாதித்துவிட்டார் எடியூரப்பா என்கின்றன டெல்லி தகவல்கள்.
ஒருவழியாக கர்நாடகா மாநில பாஜக தலைவர் பதவியை நிரப்பிவிட்ட டெல்லி மேலிடம், அடுத்ததாக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்க இருக்கிறது. ஏற்கனவே சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்காவிட்டால் சட்டசபை பக்கமே போகமாட்டோம் என பாஜக எம்.எல்.ஏக்கள் பலரும் கலகக் குரல் எழுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments