தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது..... 69 வது நாளாக கர்நாடக விவசாயிகள் போராட்டம்......
தமிழகத்திற்கு காவிரி நதிநீரை திறக்க கூடாது என வலியுறுத்தி 69 வது நாளாக மாண்டியாவில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.
காவிரி நீரை பங்கிட்டு கொடுப்பதில் கர்நாடக அரசு தொடர்ந்து பல்வேறு முட்டுக்கட்டைகளை செய்து வருகிறது. குறிப்பாக தண்ணீர் பற்றாக்குறை என்று கூறி தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுப்பு தெரிவித்து வருவதோடு, காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை ஆணையம் ஆகியவை பிறப்பித்த உத்தரவுகளையும் பின்பற்றாமல் கர்நாடகா அரசு அடம் பிடித்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க கூடாது எனக் கூறி மாண்டியாவில் 69வது நாளாக கன்னட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாண்டியாவில் உள்ள விஸ்வேஸ்வரய்யா பூங்காவில் 69 வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் கர்நாடக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்திற்கு அம்மாநில அரசு கல்லூரி மாணவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை ஆணையம் ஆகியவை இருக்கக்கூடாது எனவும் காவிரி நீர் முழுவதுமே கர்நாடகாவுக்கு மட்டுமே சொந்தம் என்பன உள்ளிட்ட முழக்கங்களும் இந்த போராட்டத்தில் எழுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என கர்நாடக மாநில பாஜக போராட்டத்தை துவங்கிய நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சியும் அதற்கு ஆதரவாகவே இருந்து வருவதாக தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த சூழலில் கர்நாடகாவில் காவிரி நீரை திறப்பதற்கு தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருவது தமிழக விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments